2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

அரசாங்கம் தலை குனிந்து நிற்கிறது: மனோ

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்லிப்பழை அமைதி ஆர்ப்பாட்டத்தில் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த சட்டவிரோதிகளை நான் என் கண்களால் கண்டேன். இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இவர்களது படங்கள் இணையத்தளம் மூலம் உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டன. இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் அந்தப் படங்கள் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட படங்கள் எனவும் அரசாங்கம் கூறுகிறது.

இதேவேளை, நேற்று உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ள புலிகளின் தலைவர் பிரபாகாரனின் மகன் என்று சொல்லப்படும் பாலகன் சம்பந்தப்பட்ட படங்களையும் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட படங்கள் என இதே அரசாங்கம்  கூறுகிறது.

ஒரே கதையை தெல்லிப்பழையிலும் ஜெனீவாவிலும் சொல்லி உலகத்தின் முன்னால் சிரிப்பாய் சிரிக்கும் நிலைமையில்,  பொய் சொல்லக்கூட தெரியாமல் இந்த அரசாங்கம் இன்று  தலை குனிந்து நிற்கிறது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பிரித்து ஐக்கியப்படும் இயக்கம்,  கொழும்பில் இன்று புதன்கிழமை  நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அமைதி கலகம் விளைவிப்பவர்கள் பயங்கரவாதிகள் ஆகும். கலகக்காரர்களை பிடித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். இன்று இப்படி எதுவும் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.  பொலிஸ் பேச்சாளரும் கூறுகின்றார். யாழ்ப்பாணத்தில் நான் என் கண்களால் கண்டதை, இவர்கள் இங்கே கொழும்பில் இருந்துகொண்டு இல்லை என்கிறார்கள். அரசாங்கம் இவர்களை காப்பாற்ற விளைகிறது என்பது உண்மை.

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு வேலை இல்லை. பித்தளை பட்டன்களுடன் சீருடை அணிந்து, தொப்பி போட்டு சும்மா கைகட்டி நிற்கிறார்கள். அங்கு  அனைத்து அரசியல், நிர்வாக, பாதுகாப்பு அதிகாரங்களையும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தன் கையில் வைத்திருக்கிறார். பொலிஸ் சும்மா வேடிக்கை பார்க்க மட்டும் முடியும்.  எனவே இவர்கள் இலங்கை பொலிஸ்  இல்லை. இவர்கள் சும்மா சிரிப்பு பொலிஸ். 

இராணுவ புலனாய்வுத்துறை  இருக்கட்டும். அவர்கள் வந்து கூட்டங்களில், என்ன, யார் பேசினார்கள் என்பதையும் கூட்டங்களுக்கு வந்த மக்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து தங்கள் எஜமான்களுக்கு சொல்லட்டும். அது அவர்கள் வேலை. எனக்கு அதுபற்றி கவலை இல்லை. ஏனென்றால் நான் எந்த ஒரு சட்டவிரோத வேலையையும் செய்வது இல்லை. ஆனால், இவர்கள் கூட்டங்களை குழப்பும் வேலையை செய்ய முடியாது. அது அரசியல்வாதிகள் சொல்லி செய்விக்கும் வேலை. இது இராணுவ புலனாய்வுதுத்றையின் வேலை இல்லை. இதை செய்தால் நான் இப்படித்தான் அம்பலப்படுத்துவோம். யாழ்ப்பாணத்தில், வன்னியில் வாழும் அப்பாவி மக்களை மிரட்டுவதை போல் எங்களை மிரட்ட நினைக்க வேண்டாம். நாங்கள் பல கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி எதிர்ப்பு இயக்கம்.

எமது எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கம் தொடர்பில் விமர்சனம் செய்தவர்கள் இன்று வாய் பொத்தி, கை கட்டி நிற்கிறார்கள். நமது யாழ். விஜயம் உறங்கும் உண்மைகளை   வெளியே கொண்டு வந்துவிட்டது. சம்பந்தனும், மனோ கணேசனும் சொல்லும்போது அது தமிழனின் பொய் என்று இவர்கள் கூறி வந்தார்கள். ஆனால், இன்று இந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் வாயினால் உண்மை வெளி வந்துவிட்டது.  வெகு விரைவில் தெற்குக்கு சென்று அங்கே சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் உண்மைகளையும் கிழக்குக்கு சென்று முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் உண்மைகளையும் நமது எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கம்  வெளியே கொண்டு வரும்.

பலாலியில் தமிழ் மக்கள், இராணுவ முகாம்களை முற்றாக அகற்றச் சொல்லவில்லை. விமான நிலையம், விமானப்படை முகாம், துறைமுகம் ஆகியவையும் இருக்க, மக்களின் வளமான தோட்டம் செய்யும் நிலங்களை மக்களிடம் மீண்டும் கையளிக்க முடியும். கொழும்பில் செய்வதை போல் கடலை நிரப்பி விமான ஓடுதளம் அமைக்க முடியும். இன்று யுத்தம் இல்லை. புலிகளும் இல்லை. புலிகளின் எறிகணைகளும் இல்லை. ஆகவே அதி பாதுகாப்பு வலயங்களும் இல்லை. பின் ஏன் மக்களின் நிலங்களை இன்னமும் பிடித்து வைத்திருக்கிறீர்கள்?  இதுதான் ஆக்கிரமிப்பு' என்றார்.

  Comments - 0

 • Amalan Wednesday, 20 February 2013 12:01 PM

  நீங்கள் தலைநகரில் தலைநிமிர்ந்ததால் அரசாங்கம் தலை குனிந்தது...

  Reply : 0       0

  Avathanee Wednesday, 20 February 2013 03:29 PM

  சத்தியம் ஜெயிக்கும்.. அசத்தியம் அழியும்.. தொடர்ந்து தைரியமாக தலை நிமிர்ந்து நில்லுங்கள் ஆண் மகனாக.. வாழ்த்துக்கள்..

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .