2025 மே 16, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு ஆஸியின் வெள்ளை வான்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கும் (சி.ஐ.டி) அவுஸ்திரேலிய மத்திய பொலிஸாருக்குமிடையில், தொடர்புகள் பேணப்பட்டு வந்துள்ளதாக, அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள புலனாய்வுச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றுவந்த சிவில் யுத்தத்தையடுத்து, நாட்டிலிருந்து வெளியேறி, அவுஸ்திரேலியாவை நோக்கி புகலிடக் கோரிக்கைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே, இந்த ஒத்துழைப்புக் காணப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் மத்திய காலப்பகுதியில், இலங்கை பொலிஸாருக்கு உபகரணங்களை வழங்குவதற்கும் பயிற்சிகளை மேற்கொள்வதற்குமான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. ஆள்கடத்தல் குழுக்களைத் தடுத்து நிறுத்துவதற்கே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஐந்து வருட காலப்பகுதியில், இலங்கை பொலிஸின் குற்றவியல் விசாரணைப் பிரிவு உட்பட எல்லாப் பிரிவினருக்குமான தளபாட வசதிகள், அலுவலக உபகரணங்கள் தொடக்கம், உயர் தொழில்நுட்ப புலனாய்வு நிகழ்ச்சித் திட்டங்கள் வரை வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட புலனாய்வு நிகழ்ச்சித் திட்டங்களில், புகைப்படங்களையும் காணொளிகளையும் புலனாய்வு அறிக்கைகளையும் ஏனைய ஆதாரங்களையும் இணைப்பதற்கான மென்பொருள் வசதியும், அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள், செய்திகள், இருப்பிட விவரங்கள் உட்பட, அலைபேசிகளிலிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கையில் பலவந்தமாகக் காணாமற் செய்யப்படுவோருக்கான காரணமாகக் கருதப்படும் புதிய வெள்ளை வான் ஒன்றும், அவுஸ்திரேலிய பொலிஸாரால், நவம்பர் 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில், சி.ஐ.டி தலைமையகத்தில் சித்திரவதைக்குள்ளானதாகக் கூறப்படும் பலரோடு இணைந்து பணியாற்றிய அமைப்பான 'சித்திரவதையிலிருந்து சுதந்திரம்' என்ற மனித உரிமை அமைப்பின் கொள்கைப் பணிப்பாளரான சோனியா ஸ்கீயற்ஸ், 'பல்வேறுபட்ட சித்திரவரை முறைகள் சி.ஐ.டியுடன் தொடர்புபட்டன.

உடலில் பல பாகங்களிலும் அடித்தல், பெண்களையும் ஆண்களையும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது உட்பட பாலியல் சித்திரவதை, சிகரெட்டுக்கள் மற்றும் அதிகரித்துவரும் முறையான சூடான உலோகப் பாகங்கள் மூலம் சுடுதல், மூச்சடைப்பு, தொங்க விடப்படுதல் ஆகியன சித்திரவதை முறைகளாகக் காணப்படுகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .