2025 மே 17, சனிக்கிழமை

மதவாதத்தை முன்னிலைப்படுத்திய தீவிரவாதத்தால் சர்வதேசத்துக்கே அச்சுறுத்தல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

மதவாதத்தை முன்னிலைப்படுத்தி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் குழுக்களால் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பில் மேற்கத்தேய நாடுகளுக்கு விளக்கமளிப்பதில் பாரிய பிரச்சினை உள்ளது என ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தெரிவித்தார்.

மதத்தை முன்னிலைப்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், அயல் நாடுகளிலும் உள்ளனர்.

அதனாலேயே, பாதுகாப்பற்ற நிலைமையும் உருவாகியுள்ள அதேவேளை, பயங்கரவாதமும் பரவி வருகின்றது. மதத்தை தவறாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். உலக நாடுகள் அனைத்திலும் இந்த மதவாதத் தீவிரவாதம் பரவியதன் பின்னரே இதன் பாரதூரம் தொடர்பில் உலகம் அறியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பான 5ஆவது சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கர்சாய், 'யுத்தம் நிறைவடைந்து கடந்த 5 வருடங்களில் இலங்கை முற்றாக மாற்றமடைந்துள்ளதுடன் அமைதியான நாடாகவும் சிறப்பான கலாசாரம் கொண்ட நாடாக காணப்படுகின்றது. சர்வதேச நாடுகள் தற்போது எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக தீவிரவாதம் காணப்படுவதுடன் இந்த தீவிரவாதத்தால் ஆப்கானிஸ்தான், அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது' என்றார்.

'ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல்-கைதா தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடு காரணமாக பல்வேறு சவால்களுக்கு அந்நாடு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'தீவரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்த ஒரே செயன்முறையாக இல்லை என்றும் நாடுகளின் எல்லைகளில் அவை வேறுபடுவதாகவும் இதன் காரணமாக தீவிரவாத்தை கட்டுபடுத்த முடியாத நிலை உள்ளதாகவும்' அவர் கூறினார்.

'இதற்கு முன்னர் மூன்று தடவைகள் தான் இலங்கைக்கு வந்திருந்ததுடன் கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்ள தான் இறுதியாக இலங்கைக்கு வந்ததாகவும்' கர்சாய் குறிப்பிட்டார்.

ஆனால், முன்னரை விட இலங்கை தற்போது உலகின் அமைதியான நாடாக மாறியுள்ளதை தான் காண்பதாகவும் இலங்கையர் தொடர்பில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துரையாடலில் ஈடுபட்ட வட மாகாண ஆளுனர் பளிஹக்கார  தீவிரவாத வழியில் செல்வோரை தீவிரவாதிகள் என்றும் போராளிகள் என்றும் அழைப்பதால் இதில் குழப்பநிலை உள்ளதாக கூறினார்.

முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா, நாடுகளுக்கிடையில் உறவுகளையும் பாதுகாப்பையும் வலுப்படுத்து நோக்கில் இந்த கருத்தரங்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அதாவது 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக 5ஆவது கருத்தரங்கு  இம்முறை நடைபெறுவதாக கூறினார்.

கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி.பஸ்நாயக்க, 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், போதைப்பொருள் கடத்தல் மனித கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு அவற்றுக்கெதழராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தேவையென வலியுறுத்திய அவர்,  கடந்த காலங்களில் இலங்கை இரண்டுவிதமாக இயற்கை அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டதுடன் அது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறினார்.

2004ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி அனர்த்தம் மற்றும் கடந்த வருடங்களில் ஏற்ப்பட்ட மண்சரிவு என்பவை அந்த பிரதானமான இரண்டு அனர்த்தங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 350 பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இம்முறை பாதுகாப்பு கருத்தரங்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானதுடன் இன்று புதன்கிழமை மாலை நிறைவடையவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .