2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'சமூக ஒற்றுமைக்கு ஒத்துழைப்பு நல்குவோம்'

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 13 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை வாழ் தமிழ் இந்துக்களினதும் சிங்கள பௌத்தர்களிளதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இந்த இரு இனத்தவர்களும் தத்தமது கலாசார தனித்துவங்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி, இப்பண்டிகையை கொண்டாடுவதே வழமையாகும்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இப்புத்தாண்டின் போது, ஒட்டுமொத்த சமூகமும், குறிப்பிட்ட ஒரு சுப நேரத்தில் உணவு சமைத்து உண்பது என்ற விடயம் ஏனைய எந்தவொரு நாட்டவரிடமும் காணமுடியாத ஒரு சிறப்பு அம்சமாகும். 

அத்தோடு புத்தாண்டானது, அர்ப்பணிப்பு, பாராட்டுதல், பகைமை மறத்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாகும். 

சித்திரைப் புத்தாண்டில் இந்த நற்குணங்களைப் புரிந்து அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து கலாசார உரிமைகளைப் பேணிப் பாதுகாத்தவாறு மன மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

அனைத்து இல்லங்களிலும் மங்கல ஒளி பிரகாசித்து, அனைவரின் முகங்களும் மகிழ்ச்சியில் மலர்ந்து, பகைமை உணர்வு தணிந்து, தம் அயலவர்களைக் கருணை உள்ளத்துடனும் கனிவு மனதுடனும் பார்க்கப் பழகும், நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக அமைய வேண்டுமென மனமார பிரார்த்திப்பதோடு, ஒரே தேசம் - ஒரே மக்கள் என்ற ரீதியில், பேதங்கள் இல்லாத, போதைப்பொருள் மற்றும் மதுபாவனை அற்ற, ஒரு தேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துக்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை நல்கும் வகையில் இச் சித்திரைப் புத்தாண்டை கொண்டாட உறுதி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்'என்று அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X