2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டார் ஞானசார தேரர்

Gavitha   / 2016 நவம்பர் 27 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மையின சமூகங்களை கள்ளத் தோணிகள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் சூளுரைத்து வரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியுள்ளனர். 

இந்தியாவின் புத்தகயாவிலுள்ள மகாபோதி விகாரையில் வருடாந்தம் நடைபெறும் ‘சாஞ்சி மேலா’ என்ற மகாபோதி உற்சவத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற நிலையிலேயே, சனிக்கிழமை இரவு ஞானாசார தேரர், இந்திய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. 

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் கலபொடஅத்தே ஞானாசார தேரர், இரட்டை நுழைவு விசாவொன்றை பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்தியா சென்றுள்ளார். 

தனது இந்திய விஜயத்தின் போது, இந்தியாவிலிருந்து நேரடியாக நேபாளத்துக்கும் சென்றுள்ள ஞானாசார தேரர், அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்குச் சென்று இலங்கை திரும்பியுள்ளார். 

இதனையடுத்து, நேற்றைய தினம் மாலை, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ‘சாஞ்சி மேலா’ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்ற நிலையிலேயே இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார். 

வீசா அனுமதி முடிவடைந்த நிலையிலும், அது குறித்து தெரியாத நிலையில் சென்றதாலேயே ஞானாசார தேரர் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, வெள்ளிக்கிழமையே பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானாசார தேரர் இந்தியாவுக்குச் செல்வதற்கு விமானப் பயணத்துக்கான டிக்கட்டை பதிவு செய்திருக்கின்றார். 

எனினும், குறித்த நேரத்துக்கு அவர் விமான நிலையத்துக்கு செல்லாததால் அவர் பதிவுசெய்திருந்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தி,லிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. 

இதனால் விமானத்தை தவறவிட்ட ஞானாசார தேரர், மீண்டும் சனிக்கிழமைக்கான விமானப் பயணத்துக்கான டிக்கட்டை பதிவுசெய்து சென்ற நிலையிலேயே, இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்தே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .