2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

9 பொலிஸாருக்குத் தூக்கு விதிக்கப்பட்டது ஏன்? 650 பக்க தீர்ப்பில் விளக்கம்

Editorial   / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 9 பொலிஸாருக்கான தண்டனை விபரங்கள் நேற்று (06) அறிவிக்கப்பட்டன. நீதிபதி முத்துக்குமரன் வழங்கிய 650 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பொலிஸ் நிலைய மரணங்கள் குறித்து: "பொலிஸ் நிலைய மரணங்கள் என்பது இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் மரணம் முதல், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு வரை பொலிஸ் நிலையங்களில் நிகழும் சித்திரவதை மரணங்களை உதாரணங்களாகக் கூறலாம். எவ்வாறாயினும், தமிழகக் காவல்துறையில் பல நேர்மையான அதிகாரிகள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவாக, பொலிஸ் நிலையங்களுக்குள் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு நேரடி சாட்சிகள் இருக்காது. ஆனால், இந்த வழக்கில் கண்காணிப்பு கெமரா (CCTV) காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, சக பெண் பொலிஸார் உட்பட ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சாட்சியமளித்துள்ளனர்."

அரசின் நிலைப்பாடு: "பொலிஸ் நிலையங்களில் நடக்கும் மரணங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது எனத் தமிழக அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று, மத்திய அரசு தரப்பிலும் இக்குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது."

தீர்ப்புக்கான காரணம்: "இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் வகையில் அமைந்திருந்தது. அத்தகைய கொடூரத்திற்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்தத் தீர்ப்பு அமைய வேண்டும் என நீதிமன்றம் முடிவு செய்தது.

இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதற்கு ஒரு பாடமாகவும், குற்றவாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை என்பதாலும், 'பொதுமக்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்ற அவர்களின் மமதையைத் தகர்க்கவும் இந்தத் தண்டனை அவசியமாகிறது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்த்தும் வகையில் 9 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது" என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .