2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஆசிரியர் இடமாற்றத்தில் சமூக நீதி பேணப்படவில்லை

Editorial   / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்  

கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்துக்குகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப படிவங்கள், வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே பாடசாலையில் எட்டு வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்கள், குறித்த பாடசாலை அதிபர் ஊடாக அவற்றை பூர்த்தி செய்து வலயக்கல்வி பணிமனைக்கு சமர்ப்பிக்குமாறு,  வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை,  கடந்த காலங்களில் கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த  வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில்  சமூக நீதி பேணப்படவில்லை எனவும், அரசியல், கட்சி,  நட்பு, பதவி நிலை  மற்றும்  உறவுமுறை போன்ற விடயங்கள் ஆதிக்கம் செலுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த காலங்களில், ஆசிரியர் இடமாற்றத்தில்  அநீதி இழைக்கப்பட்டோர்  மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும், ஆசிரியர் இடமாற்ற சபையின்  விதிமுறையை மீறி , அந்த மேன்முறையீட்டு சபையில் வலய  கல்விப் பணிப்பாளர் பிரசன்னமாகி இருந்தமை இடமாற்ற சபையின் சுயாதீன செயற்பாடுகளுக்கு பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் ஆசிரியர்கள்  குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேசிய ரீதியில் கிண்ணியாவின் கல்வி வளர்ச்சி தொடர்ந்து  கடைசி நிலையில் இருப்பதற்கு  பாடசாலை தேவை கருதி ஆசிரியர்கள்  இடமாற்றம் செய்யப்படாமையும் ஆசிரியர் வளங்கள் சமமாகப் பகிரப்படாமையும் ஒரு முக்கிய காரணம்  என புத்திஜீவிகளும் சமூக அமைப்புக்களும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வருடங்கள் கிண்ணியா கல்வி வலயத்தில்  ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வருடாந்த இடமாற்றத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எனவே, புதிய வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற இந்த இடமாற்றங்களில்  சமூக நீதி பேணப்பட வேண்டுமென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X