Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்,தீசான் அஹமட்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரனால் முன்வைக்கப்படவுள்ள சம்பூர் அனல் மின்சாரத் திட்டத்துக்கு எதிரான தனிநபர் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு மாகாண சபை உறுப்பினர்களிடம் மூதூர் பீஸ் ஹோம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 'அனல் மின்சாரத் திட்டத்தால் ஏற்படும் நன்மைகளை விட, சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் இதனால் ஏற்படும் தீமைகளே அதிகமென்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட நிலையில் அனல் மின்சார நிலையத்தை நிறுவியுள்ள பல நாடுகள் அவற்றை மூடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமானது நாளொன்றுக்கு 5,149 தொன்னுக்கும் அதிகமான நிலக்கரியை எரிப்பதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதாலேயே இம்முறையானது பெரும் அபாயகரமான முறையாக காணப்படுகின்றது.
அனல் மின்சார உற்பத்தியின்போது, கடலிலிருந்து பாரியளவில் நீரைப் பெற்றுக்கொள்வதற்கும் பின்பு வெப்பமான கழிவுநீரைக் கடலுக்குள் செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதால், கடல் வாழ் உயிரினங்கள் அழிவடைவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இது மீன்பிடித்தொழிலை பாதிப்படையச் செய்யும்.
அதேபோன்று, அனல் மின்சார நிலையத்திலிருந்து வெளியாகும் தூசும் நச்சுவாயுக்களும் வெப்பமும் நேரடியாக விவசாயத்தில் தாக்கத்தைச் செலுத்துவதன் மூலம் விவசாயத் தொழிலும் வெகுவாகப் பாதிப்படையும்.
பொதுவாக 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமானது ஒரு வருடத்துக்கு 3.7 மில்லியன்தொன் காபனீரொட்சைட்டையும் 10,200 தொன் நைதரசன் ஒக்சைட்டையும் 10,000 தொன் கந்தகவீரொட்சைட்டையும் 720 தொன் காபனோரொட்சைட்டையும் 500 தொன் தூசியையும் வெளியிடுகின்றது.
இதற்கு மேலாக ஆசனிக், பாதரசம், குரோமியம், கட்மியம், போரோன், மொலிப்டினம், தாலியம், ஈயம், நிக்கல் உள்ளிட்ட இன்னும் பல மூலகங்களை அல்லது நஞ்சுகளை அனல் மின்சார நிலையமானது வெளியிடுகின்றது. இத்தகைய மூலகங்கள் அல்லது நஞ்சுகள் மூலம் அனல் மின்சார நிலையம் செயற்படும் இடங்களில் வாழும் மக்கள் சுவாசநோய், இதயநோய், நரம்பு நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களினால் பீடிக்கப்பட்டு வருடத்துக்கு இலட்சக்கணக்கில் பரிதாபமாக பலியாகி வருகின்றனர்.
இதனால் அனல் மின்சார உற்பத்திக்கான இடமொன்றை தெரிவு செய்யும்போது மக்கள் குடியிருப்புக்களிலிருந்து ஒதுக்குப்புறமான பகுதியே தெரிவு செய்யப்படுவது பொதுவாகப் பின்பற்றப்படுகின்ற ஒரு முறையாகும். அதன் நேரடித் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இம்முறை பின்பற்றப்படுகின்றது. ஆனால், சம்பூர் அனல் மின்சார நிலையத்தை அமைப்பதற்கான இட ஒதுக்கீட்டின்போது இம்முறை பின்பற்றப்படவில்லை.
அனல் மின்சார நிலையத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து சுமார் 50 மீற்றரிலும் குறைந்த தொலைவில் (வேலியிடப்பட்டுள்ள தூரம்) மக்கள் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர். சுமார் 4.5 கிலோ மீற்றருக்கும் குறைந்;த தூரத்திலேயே மூதூர் நகரம் அமைந்துள்ளது. இதனால் இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படும் அபாயம் மிக அண்மித்துள்ளது.
பொதுவாக அனல் மின்சார நிலையத்திலிருந்து 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் வரை அதன் நேரடித் தாக்கம் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் மக்களின் வாழிடத்திலிருந்து வெறும் 50 மீற்றரிலும் குறைந்த தொலைவில் (வேலியிடப்பட்டுள்ள தூரம்) அனல் மின்சார நிலையத்தை அமைப்பதானது மக்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். இந்த வகையில் பார்க்கின்றபோது குறித்த பகுதியானது அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கு எவ்வகையிலும் பொருத்தமற்றதாகும்.
அத்தோடு யுத்தத்தினால் மூதூர் பிரதேச மக்கள் இடம் பெயர்ந்திருந்த காலத்தில் இத்திட்டத்துக்;கான முதலாவது புரிந்துணர்வு உடன்படிக்கை இடம்பெற்றதும் அதன் பின்பு சம்பூர் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வந்த காலத்தில் அப்பகுதியில் மக்கள் எவரும் இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரையப்பட்டதும் ஒரு பிழையான நடைமுறையாகும். இதனால் தற்போது அப்பகுதியில் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கேள்விக்குறியாகிவிட்டது.
எனவே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரனால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று (26) கிழக்கு மாகாண சபை அமர்வின்போது சம்பூர் அனல் மின்சாரத் திட்டத்துக்கு எதிராக கொண்டுவரவுள்ள தனிநபர் பிரேரணைக்கு ஒன்றிணைந்து ஆதரவளித்து பிரேரணை ஏகமனதாக நிறைவேறுவதற்கு வழிசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago