2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘நஞ்சற்ற விவசாயத்தால் மாத்திரமே வாழ்வு நீடிக்கும்’

Princiya Dixci   / 2021 ஜூலை 26 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

நஞ்சற்ற விவசாயத்தால் மாத்திரமே  மக்களின் சுகமான வாழ்வு நீடிக்கும் என்ற உன்னத உண்மையை உலகம் இன்று உணரத் தலைப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.

இன்றைய நவீனத்துவம், பண்டைய காலத்தை நோக்கிச் செல்லத் தலைப்பட்டுள்ளதைக் காணலாம் எனவும் அதனை அடியொட்டியே,  சேதனப் பசளை பாவிக்கும் யுகத்தை நோக்கி இலங்கையும் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்களுக்கான கூட்டம், அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்பக் கல்லூரி மண்டபத்தில் நேற்று (25) காலை நடைபெற்றது.

சேதனைப் பசளைகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை, உள்ளூராட்சி மன்றங்களிடம் ஒப்படைப்பது என்ற முடிவை உத்தியோகபூர்வமாக உள்ளூராட்சிமன்றத் தலைவர்களுக்குத் தெரிவிப்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், “விவசாயத்தில் இரசாயனப் பசளைகளை பாவித்ததால் துரதிர்ஷ்டமான பலாபலன்களை நாடு அனுபவித்துவருகின்றது. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பாவித்த சேதனைப் பசளைகளை நாமறிவோம். அதனால் அவர்கள் 100 வயது வரை நோய்களின்றி தேகாரோக்கியத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

“ஆனால், பசுமைப் புரட்சி என்ற போர்வையில் விவசாயிகள் இரசாயனப் பசளைகளைப் பாவிக்க ஊக்குவிக்கப்பட்டார்கள். அதனால் இன்று உணவுப் பாதுகாப்பு என்பது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

“இரசாயனமின்றி விவசாயம் செய்யமுடியாதென்ற நிலைக்கு இட்டுச் சென்றது. விளைவாக மக்கள் புற்றுநோய், சிறுநீரக நோய் என பல நோய்வாய்ப்பட்டனர். மக்களின் வாழ்க்கைக் காலமும் சுருங்கியுள்ளது.

“எனவே, நாம் மீண்டும் பண்டைய யுகத்துக்குச் செல்ல வேண்டும். சேதனைப் பசளைகளை உற்பத்தி செய்து, எமது விவசாயத்தை வளம்படுத்த வேண்டும். அதனூடாக நோய்களற்ற தேகாரோக்கியமான சமுதாயமொன்றை உருவாக்கவேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .