2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

‘பொறுப்பற்ற அறிக்கையால் கவலை’

Princiya Dixci   / 2021 மே 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்

“பொறுப்புள்ள சுகாதார அதிகாரி ஒருவரின் பொறுப்பற்ற அறிக்கை குறித்து மிகவும் கவலையடைகின்றேன்” என திருகோணமலை மாவட்டப் பாராளுன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகள் இரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றார்கள் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இம்ரான் எம்.பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கிண்ணியாவில் பொலிஸார் கடமையில் உள்ளனர். அதேபோல, பாதுகாப்புப் படையினரும் கடமையில் உள்ளனர். சகல இறப்புகளும் உரிய முறைப்படி பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டு, உரிய விசாரணைகளின் பின்பே அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

“இந்நிலையில், பொறுப்புவாய்ந்த ஒரு சுகாதார சேவை அதிகாரி, இவ்வாறு பொறுப்பற்ற முறையில் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

“இந்த அறிக்கையின் மூலம் அவரது நேர்மைத் தன்மை குறித்த சந்தேகம் பொதுமக்களிடையே வலுவடைந்துள்ளது.

“இறப்புகளிலோ அல்லது இறந்த உடல்களிலோ அவருக்கு சந்தேகம் இருக்குமாயின், சட்ட ரீதியான செயற்பாடுகளை அவர் முன்னெடுக்க முடியும். அதற்கான உரிமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்ற முறையில் அவருக்கு இருக்கின்றது.

“இதனை விடுத்து பொறுப்பற்ற முறையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பது முறையான செயலல்ல.

“எனவே, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது இந்த ஊடகத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.  இதன்மூலம், பொதுமக்களுக்கு எற்பட்டுள்ள சந்தேகத்தை அவர் நிவர்த்தி செய்ய முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X