Editorial / 2019 ஜனவரி 31 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், தீஷான் அஹமட்
தொல்பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட கிரலாகல தூபியில் ஏறி எடுத்த புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பொறியியல் பீட மாணவர்களை விடுவிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும், ஆளுநர் செயலகத்தில் ஆளுநரைச் சந்தித்து, மேற்படி வேண்டுகோளை விடுத்தனர்.
இதன்போது ஆளுநர், சட்டரீதியான முன்னெடுப்புகளைக் கேட்டறிந்ததோடு, இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணியைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்துகொண்டார்.
இது தொடர்பாக பொலிஸார் புராதன தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து விரிவான அறிக்கையைக் கோரியுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் அதனை ஆராய்ந்து, தீர்ப்பை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி, ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவித்தார்.
மேலும், புராதன தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி மந்தவலவை ஆளுநர் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.
சந்தேகநபர்களான மாணவர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்யவில்லை எனவும் அது, தற்செயலாக இடம்பெற்ற விடயமெனவும் தெரிவித்த ஆளுநர், இது விடயமாக கரிசனை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர், எதிர்வரும் வாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .