Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை - பாலம் போட்டாறு பகுதியில், லொறியின் உதவியாளரைத் தீ மூட்டி கொலைசெய்த குற்றச்சாட்டின்பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை, மன்னாரில் வைத்து நேற்றிரவு (05) கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, அவரது மனைவியான கௌரி மனோகரி (37 வயது) என்பவரையும் தம்பலகாமம் பொலிஸார் கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இம்மாதம் 1ஆம் திகதி பொலன்னறுவை - ஹிங்குராங்கொட பகுதியிலிருந்து லொறியொன்றில் சாரதியும் அவரது உதவியாளரும் திருகோணமலை நோக்கிப் பயணித்த போது, சாரதிக்குத் தூக்கம் ஏற்பட்ட நிலையில், லொறியை நிறுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில் அன்று அதிகாலை வீதியோரத்தில் லொறி ஒன்றில் எரிந்த நிலையில் சடலமொன்று இருப்பதாக, தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர பார்வையிட்டதையடுத்து, சடலம் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, இறந்து கிடப்பவர், லொறியின் சாரதியான திருகோணமலை - மிஹிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் 47 வயதுடைய நபரின் சடலம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிஸார், லொறியில் பயணித்த உதவியாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், உதவியாளர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ என்பவர் எனவும் அவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது.
இதனையடுத்து, லொறியில் பயணித்த சாரதி தொடர்பில் சந்தேகம் எழுந்த நிலையில், சாரதியின் வீட்டில் அவரது மரணம் தொடர்பில் மரண அறிவித்தல் பதாதைகள் போடப்பட்டிருந்த நிலையில் சாரதியான கந்தசாமி யோகநாதன் உதவியாளரை, லொறியில் வைத்துத் தீ மூட்டி எரித்துவிட்டு, ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிஸார் தீ மூட்டி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் லொறியில் பயணித்த சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து, சந்தேகநபர், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பொலிஸ் குழுவினர், நேற்றிரவு ஏழு மணியளவில் சந்தேகநபரான கந்தசாமி யோகநாதன் என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனாலும், அவருடன் உதவியாளராக லொரியில் சென்ற 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ என்பவரது சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டிருந்தபோதிலும் அவரது உடலின் உடற்பாகங்கள், பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், டி.என்.ஏ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக இரத்த மாதிரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வர உள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

14 minute ago
27 minute ago
29 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
29 minute ago
32 minute ago