2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்படாமையால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை, சம்பூர் தேர்தல் தொகுதியில் வசிக்கும் தமது பெயர்கள், இவ்வருடத்துக்கான வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என, மூவரினால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்ட பிராந்திய அலுவலகத்தில், திங்கட்கிழமை (08) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்த போது தாமும் இடம்பெயர்ந்ததாகவும், இறுதியாக கிளிவெட்டி அகதிமுகாமில் இருந்த நிலையில், 2015.07.22 அன்று, நல்லாட்சியின் கீழ் மீளக்குடியமர்த்தப்பட்டதாகவும் அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், தமக்கு எந்தவிதமான மீள்குடியமர்வுக்கான உதவிகளும் வழங்கப்படாமல் இருந்து வருவது மட்டுமன்றி, தமக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாக்காளர் பதிவையும் கூட கிராமசேவகர் பதிவு செய்ய மறுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதியுமாறு கேட்டபோது, காணியை விட்டு வெளியேறினால் பதிவு செய்வதாக கிராமசேவகர் தெரிவித்தாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமது அடிப்படையுரிமையான வாக்குரிமையை பெற ஆவன செய்துதவுமாறு, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மூவரில் இருவர் கடற்கரைச்சேனையையும் ஒருவர் சம்பூர் கிராமத்தையும் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் தற்போது வசித்துவரும் காணி, அனல் மின்நிலையத் தேவைக்காக எடுக்கப்பட்ட நிலையில், அதற்கு தமது பூர்வீக காணியை தரமுடியாது என இவர்கள் எதிர்த்ததால், மூவருக்கெதிராகவும் பிரதேச செயலகத்தினால் தொடரப்பட்ட  வழக்கு, மூதூர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் அதனால்தான் அதிகாரிகள் இந்த மறுப்பைத் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .