2025 மே 14, புதன்கிழமை

‘பிரபாகரன் இருந்திருந்தால் அநீதிகள் ஏற்பட்டிருக்குமா?’

கனகராசா சரவணன்   / 2017 ஜூன் 07 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிழக்கில், யுத்த காலத்தை விட மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இடம்பெற்றுவருகின்றன” என்று குறிப்பிட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர், “தமிழீ​ழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், தமிழ் மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?” என்றும் கேள்வியெழுப்பினார். 

“தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு நான் தயார்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

நல்லாட்சியில், தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பிலுள்ள ஒரே ஒரு விகாரையான மங்களராமய விகாரையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, பல்வேறு பிரச்சினைக்கு மத்தியில், சேவை செய்துவருகிறேன். சிங்கள மக்களை விட தமிழ் மக்கள், என்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.  

“நான், இனவாதியல்லன். இருந்தபோதும், யுத்தம் நடந்து முடிவுக்கு வந்த பின், தமிழ் மக்களுக்கு ஒரு நிம்மதியான சுயமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தேன், அது நடக்கவில்லை. இது மாதிரி, சிங்கள மக்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்த்தேன், அதுவும் நடக்கவில்லை. இதற்கு, ஒரு தேரர் என்ற ரீதியில் மிகவும் மனவருத்தப்படுகின்றேன். 

“புனானையிலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 400 ஏக்கர் காணியை, மக்களுக்கு வழங்காமல், திறந்த பல்கலைக்கழகம் என்ற போர்வையில் முஸ்லிம் தவ்பீக் மதரசா கட்டடம் அமைக்கப்படுகிறது. அதற்கு எப்படி சட்டம் இடம்கொடுத்தது?

“தமிழர்களின் தலைவர்கள் எனத் தெரிவிக்கும், வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோரால், இதனை நிறுத்தமுடியுமா?  

“புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால், புனானையில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா? இன்று, தமிழ் மக்களின் காணி வீடு, தொழில் போன்ற அடிப்படை வசதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு, என்னால் முடிந்தவரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எனவே, நல்லாட்சித் தலைவர்கள் எங்களுடன் சேர்ந்து இந்த மக்களுக்கு வேலை செய்யத் தயாரா?” என, அந்த அறிக்கையில் கேட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .