2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'எமது மக்கள் திருப்தியடையும் வகையில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 23 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமாா்

'யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இன்னும் 5,250 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது என்பதுடன், எமது மக்கள் திருப்தி அடையும் வகையில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை, செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தின் 47ஆவது ஆண்டு நிறைவு விழா, அவ்வித்தியாலயத்தில் புதன்கிழமை (22) மாலை   நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'எமது மக்களின் காணிகளில் மரக்கறி மற்றும் பழச் செய்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால், எமது மக்களுக்கு நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நியாயமான முறையில் சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதை நாங்கள் மறுப்பதற்கில்லை. உதாரணமாக, எமது மாவட்டத்தில் சம்பூர் கிராமத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சில காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்திலும் சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில்  எமது மக்கள் திருப்தி அடையக்கூடிய நிலையில் இல்லை.  எமது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்' என்றார்.  

'மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக  எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு  பதில்  அளிக்க வேண்டியது  எமது கடமை என்பதுடன் அராசாங்கத்தின் கடமையும் ஆகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அம்மக்கள் உணர வேண்டும்.  அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அப்போதே, அம்மக்கள் மன நிம்மதி அடைவார்கள்.

இன்னொருபுறம,; வேலைவாய்ப்புக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுவதற்கு வழிவகுத்த அரசாங்கத்துக்கு, அவர்கள் வெளிவரும்போது, அவர்களுக்கு வேலைவாய்ப்பை  ஏற்படுத்திக்கொடுப்பதிலும் பங்கு உள்ளது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X