2026 மார்ச் 23, திங்கட்கிழமை

'கொடுப்பனவு வழங்கப்படவில்லை'

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்

திருகோணமலை,குச்சவெளி கோட்டத்துக்குட்பட்ட அந்நூரியா கனிஸ்ட வித்தியாலயம், நாவற்சோலை கனிஸ்ட வித்தியாலயம்,சாகரபுர வித்தியாலயம் மற்றும் தென்னமரவாடி போன்ற பாடசாலைகளுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கஷ்டப்பிரதேசக் கொடுப்பனவு வழங்கப்படவில்லையென இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம், கிழக்கு மாகாண கல்விச் செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண தமிழ்,சிங்கள மொழி மூலப்பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் சம்பந்தமாக அண்மையில் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தன மற்றும்  மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் ஆகியோரைச் சந்தித்தது.
இதன்போதே,அச்சங்கம் இவ்வாறு முறைப்பாட்டை முன்வைத்தது.

இது தொடர்பில் அச்சங்கம் கூறுகையில்,

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள ஊட்டல் பாடசாலை,யுத்தத்துக்குப் பின்னராக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மற்றும் கனிஸ்ட பிரிவு பாடசாலைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கே இக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

கஷ்டப்பிரதேசத்துக்கென 1,500 ரூபாய் அதி கஷ்டப்பிரதேசத்துக்கென 2,500 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்டு வருகின்றன.

இறக்கக்கண்டிக்கு அப்பாலுள்ள பல பாடசாலைகள் இக்கொடுப்பனவுகளைப் பெற்று வருகின்ற அதேவேளை, ஒரு வருடமாகியும் அந்நூரியா கனிஸ்ட பாடசாலை மற்றும் இப்பாடசாலையை அண்டிய மூன்று பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும் கஷ்டப்பிரதேசக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

எனவே,இக்கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண கல்விச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .