2025 மே 21, புதன்கிழமை

'கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டாம்'

Suganthini Ratnam   / 2016 மே 25 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

புதிய அதிபர் நியமனத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அரசியல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையால் முன்வைக்கப்பட்ட இறக்காம கோட்ட ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் இந்த சபையிலே முன்வைக்கப்பட்ட குச்சவெளி தனி கல்வி வலயம் அமைப்பது தொடர்பான பிரேரணையில் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. குறிப்பாக, 2005ஆம் ஆண்டு நாங்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அமைக்க முற்பட்டபோது சிலர் அரசியல் ரீதியாகவும், இனரீதியாகவும் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டனர். ஆனால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது 2011-2013 ஆண்டு காலப்பகுதியில் தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்ததனை இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக தனியான கல்வி வலயத்தை இனரீதியாக சிந்திக்காமல் குச்சவெளி, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் தனியான கல்வி வலயத்தினை அமைப்பதன் மூலம் அப்பிரதேசத்தினுடைய கல்வி ரீதியான தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும். விசேடமாக எமது மாகாணத்திற்கு கிடைக்கின்ற வளங்களை சரியாக பங்கிட்டு பின்தங்கிய பாடசாலைகளின் கல்வி நிலையை முன்னேற்ற முடியும்.

கடந்த மாகாண சபை ஆட்சியின் போது முன்னால் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை உருவாக்குவதற்கு உருதுணையாகவிருந்தார். இப்போது அக்கல்வி வலயம் சிறந்த முறையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதே போன்று இன்று தனியான கல்வி வலயம் அமைப்பது தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. எனவே இதுதொடர்பில் கவனத்திற்கொண்டு மாகாண சபையில் ஒரு குழுவை நியமித்து பாடசாலைகளை பிரித்து வலயங்கள் அமைப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை

இன்று எமது மாகாணத்திலே கல்வி அமைச்சராக இருக்கின்ற நீங்கள் கடந்த காலங்களில் ஒரு அதிகாரியாகவிருந்து கல்வித்துறைக்கு அரும்பங்காற்றியுள்ளீர்கள். குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்திலும் ஆசிரியராக சில வருடகாலம் பணியாற்றியுள்ளீர்கள். ஆகையால் கல்விச் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை நன்கறிந்தவராக உள்ளீர்கள்.
தற்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் புதிதாக அதிபராக தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அப்பிரதேச அரசியல்வாதி ஒருவர் தனது அரசியல் அதிகாரத்தினைப் பயன்படுத்தி அதிபர்களை அச்சறுத்தி வருகின்றார்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றுக்கு தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை கையளிப்பதற்கான நிகழ்வுகளை அப்பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்தபோது அப்பாடசாலை அதிபருக்கு ஏறாவூர் பிரதேச அரசியல்வாதி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்து அந்நிகழ்வுகளை இல்லாமல் செய்த சம்பவத்தினையும் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். எனவே பாடசாலைகளுக்குள் அரசியல்; செய்து மாணவர்களின் கல்வியை சீர்குலைக்க மேற்கொள்ளுகின்ற நடடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .