2025 மே 19, திங்கட்கிழமை

'சமுர்த்தித் திட்டத்தின் தோல்விக்கு பசிலே காரணம்'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

கடந்த காலத்தில் சமுர்த்தித் திட்டம் தோல்வியடைந்ததற்கு அதிகாரிகள் காரணம் அல்லர். பசில் ராஜபக்ஷவே காரணம். அவரே இதற்குப் பொறுப்புகூற வேண்டியவர் என, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற நிகழ்வில் பேசும்போதே, அவர்  மேற்படி தகவலைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் பேசிய அமைச்சர் குறிப்பிடுகையில்,

இன்று கிராமங்கள், பல கடன் நிறுவனங்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. மக்கள் இதனால் கடன்சுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெண்கள் தமது கணவன் மாருக்குத் தெரியாமல் இவ்வமைப்புகளிடம் கடன்களைப்பெற்று, கட்டமுடியாமல் பலர் இறந்த சம்பவங்களும் உள்ளன.

இவ்வாறான அமைப்புக்களிடமிருந்து வறுமையில் வாடும் மக்களை விடுவிக்க வேண்டும். அதற்கான பல வழிமுறைகள் இந்த வாழ்வின் எழுச்சித்திட்டமூலம் முன்னெடுக்க வேண்டும்.

வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தினை வினைத்திறன்மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ் வாழ்வின் எழுச்சி திணைக்களம் மற்றும் வாழ்வின் எழுச்சி வங்கிகளை நவீனமயப்படுத்தப்படவுள்ளன.

கடந்த காலத்தில் வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஊடாக பல்வேறு கடன்கள் பல்வேறு வட்டி வீதங்களில் வழங்கப்பட்டு பாரிய தவறுகள் நடைபெற்றுள்ளன. அவற்றினை சீர்செய்து, பயனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நாளாந்த, வாராந்த, மாதாந்த கடன்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் கிராம மட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் கிராமங்கள் தோறும் வறுமை நிலையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவை சட்டமாக்கப்படுவதற்காக சட்டமா அதிபரிடம் வழங்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவுள்ளது.

இத்திட்டங்களின் பயன்கள் உடன் மக்களை சென்றடைய வழிவகுக்க வேண்டும். அவ்வாறு இல்லாததனால் மக்கள் வேறு வழிகளை நாடுகின்றனர். குறிப்பாக மகாபொல புலமைப்பரிசில் மக்களிடம் தெரிந்த அளவுக்கு வாழ்வின் எழுச்சித்திட்டம் மூலம் வழங்கும் புலமைப்பரிசில் மக்கிளிடம் பிரபல்யமடையவில்லை.

அந்தக் கொடுப்பனவுகளை உரிய திகதிகளில் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் அந்த மாணவர்கள், தமது மேலதிக கல்விக்கு, போக்குவரத்துக்காசுக்கு அதனைச் செலவு செய்வார்கள்.

கிhராமியக் குழுக்கள் பலப்படுத்தப்பட வேண்டும்  வாழ்வின் எழுச்சித்திட்ட (சமுர்த்தி) வங்கிகளில் இருந்து குறித்த குழுக்களுக்கு நிதியை வழங்கி மக்கள் தேவையான நேரத்தில் கடன் பெறும் முறையை அமுலாக்க வேண்டும்.

இதேவேளை  நலன் உதவிகள் வழங்குவதினால் மட்டும் வறுமையினை குறைத்துவிட முடியாது. அவர்கள் நிரந்தர வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மூலதன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அதற்காகவே சமுர்த்தி உதவியில் சிறு தொகையினை சேமிப்பாக மாற்றப்படுகின்றது.

இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரட்ன, மேலதிக செயலாளர் அநுர வீரதுங்க, திருகோணமலை  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆ.அருள்ராசா, வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் இத்திட்டத்தின் கிராம மட்ட அதிகாரிகள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறந்த வகையில் திட்டத்தை செயற்படுத்திய அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X