2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

டெங்கு நோயா அல்லது ஆட்கொல்லி நோயா? ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 21 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், வா.கிருஸ்ணா, பொன் ஆனந்தம்

திருகோணமலையில் பரவி வருவது டெங்கு நோயா அல்லாவிடின், வேறேதும் ஆட்கொல்லி வைரஸ் நோயா என்பது தொடர்பில் பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விசேட வைத்திய நிபுணர் குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  ஆர்.எம்.அன்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

கிழக்கு மாகாண சபை  அமர்வு இன்று (21) சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி நடைபெற்றது. இதன்போது, திருகோணமலையில் தீவிரமாகப் பரவி வரும்  டெங்கு நோயைத் தடுப்பது தொடர்பில் அவசரப் பிரேரணையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் முன்வைத்தனர்.

டெங்கு நோய்த் தாக்கத்தில்  மூதூர் பிரதேசத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அதிகளவான  உயிரிழப்புகள் கிண்ணியாப் பிரதேசத்திலேயே இடம்பெறுகின்றது. இதற்குக் காரணம் போதிய சிகிச்சை கிடைக்காமல் உள்ளதா? அல்லது, வேறேதேனும் பிரச்சினையா? என்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் கூறினார்.  

இவ்வாறிருக்க,  கிழக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது  தொடர்பான அவசரக் கூட்டம் மாகாண சபையில் நடைபெற்றது.

மாகாண சபை அமர்வை  ஒரு மணிநேரம் ஒத்திவைத்து  இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில்  டெங்கு நோய்  பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கான  நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.
டெங்கு ஒழிப்புச்  செயற்பாட்டின்போது ஆளணி, வாகனப் பற்றாக்குறை இருப்பின் அவற்றை  உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நிவர்த்தி  செய்து தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  தெரிவித்தார்.

அத்துடன்,  நுளம்புகள் பரவும் வகையில்  சூழலை  வைத்திருப்போருக்கு எதிராக  கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பணித்துள்ளார்.

திருகோணமலையில் இதுவரையில் 2,388 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதுடன், திருகோணமலையில் 15 பேரும் மட்டக்களப்பில் 3 பேரும் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X