2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக முதலமைச்சர் வாக்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(திருகோணமலையிலிருந்து றிப்தி அலி)

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய அறிவுறுத்தல் தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்  பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடுவது என கிழக்கு மாகாணசபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.  

கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் இரா.துரைரட்ணம் தனிநபர் பிரேரணை ஒன்றை இன்று இடம்பெற்ற சபை கூட்டத்தின்போது  கொண்டு வந்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து, இவ்விடயம் தொடர்பில் தான் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுத் தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உறுதியளித்தார்.
 
இதனையடுத்து வெளிநடப்பு செய்யவிருந்த அனைத்து உறுப்பினர்களும் சபையில் தொடர்ந்து கலந்து கொண்டனர்.

எனினும் பொலிஸார் தங்களை மதிப்பதில்லை என்றும் தங்களுக்கான பாதுகாப்புக்கு பொலிஸாரை பெறுவதற்கு தாங்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதாக பல மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பாதுகாப்பு தொடர்பான சகல பிரச்சினைகளுக்கு தானும் சபைத் தவிசாளர் பாயிஸும் இணைந்து தீர்வொன்றை பெற்றுத் தருவதாக மீண்டும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உறுதியளித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .