2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பல்லின மக்கள் வாழும் நாடு இலங்கை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது: உதுமாலெப்பை

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 22 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

நமது நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை நமது நாடு பல்லின மக்களுக்கும் சொந்தமான நாடு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நமது நாட்டின் மான்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களும், பல அரசியல் தலைவர்களும், பெரும்பான்மையான பௌத்த மதகுருமார்களும், பௌத்த மக்களும் நமது நாடு பல்லின மக்களுக்கு சொந்தமான நாடு என்றும் கூறி வரும்போதும் இனவாத சிந்தனை உள்ள சிலர் பௌத்த மக்களையும் சிறுபான்மையினரையும் பிரித்து இனக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நாடு பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தம் எனக் கூறி வருவது வேதனைக்குரிய விடயமாகும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு அண்மையில் தவிசாளர் ஆரியபதிகலபதி தலைமையில் நடைபெற்றபோது முஸ்லிங்களின் ஹாலால் உணவு தொடர்பாக அண்மைக் காலமாக பொதுபலசேன என்ற இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிங்களுக்கு எதிரான பிரசாரங்களை கண்டிக்கும் நோக்குடன் முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒன்றினைந்து சமர்ப்பித்த கண்டனப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்...

இனவாதத்தை வளர்ப்பவர்கள் அதே இன வாதத்தால் அழிந்து போவார்கள் என்ற பொதுவான நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் இனவாதம் பேசி இனவாதத்தை உருவாக்கியவர்கள் எல்லாம் அழிந்து இருக்கின்றார்கள். இனவாதத்தை முஸ்லிம்களோ, தமிழர்களோ, பௌத்தர்களோ பேசினாலும் நாம் எப்போதும் இதை எதிர்த்து வருகின்றோம்.

பல்லின மக்கள் வாழுகின்ற நமது நாட்டில் தத்தமது மதத்தைப் பின்பற்றி தத்தமது கலாசாரத்துடன் தங்களின் மார்க்க வழிபாட்டில் உணவுகளை உண்ணுவதற்குரிய உரிமைகள் எல்லோருக்கும் உள்ளது. நாம் நமது மார்க்க வழி முறைகளை பின்பற்றி வாழ வேண்டும். அதேவேளை சகோதர இனங்களுடன் சினேக பூர்வமான உறவுகளுடன் வாழ வேண்டும் இன வாதத்தை உருவாக்கியதனால் நமது நாடு பல அழிவுகளை சந்தித்த வரலாறு நமக்கு முன் உள்ளது என்பதினை நாம் மறந்துவிடக்கூடாது.

முஸ்லிம்களின் ஹலால் உணவு தொடர்பாக அண்மைக்கலமாக இனவாத உணர்வுகளை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர். முஸ்லிம்களின் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதை ஹலால் உணவு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹலால் உணவை ஏனையவர்கள் விரும்பினால் சாப்பிடலாம். ஏனையவர்கள் ஹலால் உணவை சாப்பிடுங்கள் என்று முஸ்லிங்கள் கூறவில்லை, முஸ்லிம்கள் கட்டாயமாக ஹலால் உணவை உண்டே ஆக வேண்டும். இது எங்களுடைய உரிமையாகும்.

எங்களின் இஸ்லாம் மதம் யுத்தம் செய்கின்ற போதும் அந்நிய மதத் தலைவர்களையும், மதஸ்தலங்களையும் கண்டால் மரியாதை செலுத்துங்கள் என்று சொல்கின்றது. மதத்தலைவர்கள் ஒரு போதும் அந்நிய மதங்களை இழிவுபடுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயமாகும். நமது நாட்டில் எல்லா மதத் தலைவர்களையும் சகல இன மக்களும் மதிக்கின்ற நிலைமை உருவாக வேண்டும். நமக்கிடையிலே பிரச்சினைகள் வருகின்றபோது மதத்தலைவர்கள் அப்பிரச்சினைகளை தீர்க்ககூடியவாறு இருத்தல் வேண்டும்.

அண்மையில் கிண்ணியாவில் நடைபெற்ற தேசிய மீலாத் விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அவர்களின் பௌத்த மதத்திற்கான ஆலோசகர் இலங்கையில் இனவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும், எல்லா இனங்களும் சமாதானத்துடன் வாழவேண்டும் என்று கூறினார்.

முஸ்லிம்களின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் முகமாக அக்குறஸ்ஸையில் தேசிய மீலாத்விழா நடைபெற்றபோது குண்டுவைக்கப்பட்டு பலர் இறந்ததுடன் பலர் காயமடைந்தனர். அதுதான் இலங்கையில் இடம்பெற்ற இறுதி குண்டுத்தாக்குதல் ஆகும். முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகளும் இந்த நாட்டில் சமாதான ஏற்படுவதற்கு உதவியுள்ளது என குறிப்பிட்டார். இதேவேளை அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் பௌத்த மத தேரர் குழுவினர் சிலர் ஒன்றிணைந்து முஸ்லிம்களுடைய மனங்களை புண்படுத்தும் வகையில் சில ஆர்ப்பாட்டங்களை நடாத்தி முஸ்லிம்களுடைய மத உணர்வை தூண்டுகின்ற அளவிற்கு செயற்பட்டிருப்பது கண்டிக்க வேண்டிய விடயமாகும். மதத்தலைவர்கள் எல்லா மத மக்களும் மதிக்கக்கூடிய வகையிலே செயற்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான ஊர்வலங்களில் பௌத்த பிக்குகள் கலந்துகொள்வது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் இனவாதத்தை உருவாக்கி இந்த நாட்டில் ஒரு சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தில் பல தீய சக்திகள் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இனவாதத்ததை இல்லாமல் செய்வதற்கு குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினரான பிரியந்த பத்திரண அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான தவறான கருத்துக்களை வெளியிட்டார். இலங்கை நாட்டின் சுதந்திரத்திற்காகவும், சமாதானத்திற்காகவும், சிலவகை பொம்மைகள் நீண்டகாலம் உழைத்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்களை அவர் வாபஸ் வாங்க வேண்டும்.

இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையை கலைத்துவிட வேண்டும் என சிலர் அறிக்கை விடுகின்றனர். முஸ்லிம்களின் ஜம்இயத்துல் உலமா சபையை கலைத்துவிடுவதற்கு இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. பௌத்த மக்களுக்கான மகாசங்கம் ஏனைய மதங்களுக்கான அமைப்புகளும் நமது நாட்டில் இயங்கி வருகின்றன. ஜம்இயத்துல் உலமா சபை பற்றி தெளிவான விளக்கம் இல்லாததனால் இவ்வாறு தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். முஸ்லிம் மக்கள் ஷரியா சட்டத்தின்படி நடப்பதற்கு வழிகாட்டிச் செயற்படும் ஜம்இயத்துல் உலமா சபை எந்த சந்தர்ப்பத்திலும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. நமது நாட்டில் முக்கியமான பிரச்சினைகள் வரும்போது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்கினை ஆற்றி வருகின்றது என்பதனை நான் தெளிவுபடுத்துகின்றேன்.

முஸ்லிம்களின் ஹலால் உணவு பற்றி தவறான விமர்சனம் செய்து ஏதோ முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பதன் ஊடாக இலங்கையை கைப்பற்ற போகின்றார்கள் என்ற போர்வையில் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.

அண்மையில் மஹரகமையில் நடைபெற்ற பொதுபலசேன அமைப்பின் மாநாட்டில் ஆயிரக் கணக்கான சிங்கள மக்களை அழைத்து வந்து முஸ்லிம் மக்கள் தொடர்பான இனவாதக் கருத்துக்களை பரப்பி உள்ளனர். அது மாத்திரம் இல்லாமல் ஒருமாத காலத்திற்குள் ஹலால் உணவு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என காலக்கேடும் வழங்கி உள்ளனர். முஸ்லிம்களின் ஹலால் உணவு தொடர்பான விளக்கம் புரியாமல் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 30 வருட காலமாக நமது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பெறுமதிமிக்க பல ஆயிரக்கணக்கான உயிர்களையும். உடமைகளையும் மூன்று இன மக்களையும் இழந்து உள்ளோம். இனவாதம் உருவாக்கப்பட்டதால் நமது நாட்டில் வாழும் சகல இன மக்களும் நிம்மதியை இழந்தோம். இப்போது தான் அமைதி சமாதானம் சக வாழ்வு ஏற்பட்டு வருகின்றது. இந்த நல்ல சூழ்நிலை இல்லாமல் செய்வதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.

கிழக்கு மாகாண சபையில் மாத்திரம் தான் எல்லோரும் இணைந்து நல்ல தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலான மாகாண அரசு காலத்தில் பல பிரச்சினைகளுக்கு ஆளும் கட்சியில் அமைச்சர்களாக உறுப்பினர்களாக இருந்து முகம் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு வரலாற்று தீர்மானங்களை எடுத்துள்ளோம். என்பதை இச் சபைக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

திடீர் என பிரதேச சபைத் திருத்தச் சட்டம் கிழக்கு மாகாண சபைக்கு கொண்டு வரப்பட்டது நமது நாட்டில் வாழும் முழு சிறுபான்மை மக்களுக்கான குரலான கிழக்கு மாகாண சபை தீர்மானம் எடுக்க வேண்டிய நிலைமை அன்று எங்களுக்கு எற்பட்டது. ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டு நெஞ்சை நிமிர்த்தி சிறுபான்மை மக்களுக்கு புதிய பிரதேச சபை திருத்தச் சட்டத்தில் ஏற்படப்போகும் அநியாயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து திருத்தம் செய்தோம். இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். கிழக்கு மாகாண சபையில் வரலாற்று துரோகம் செய்தவர்கள் என்ற பெயரை நாங்கள் பெறமாட்டோம், அதில் கவனமாக இருப்போம்.

இதேபோல நாடு, நகர சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக அரசினால் சமர்ப்பிக்கபட்டது. நாடு நகர சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையால் அங்கீகரிக்கபட்டிருந்தால் கிழக்கு மாகாணம் முழுவதும் வாழும் சிறுபான்மை மக்களுக்கும், கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் ஏனைய மாகாணங்களிலும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் பெரும் அநீதி ஏற்பட்டிருக்கும் இந்த வேளையிலும் கூட தைரியமாக அரசிடம் உண்மை நிலமையை புரிய வைத்தோம். எங்களை வரலாற்று துரோகம் செய்தவர்களாக மாற்றி விடாதீர்கள் என்று கூறினோம். கிழக்கு மாகாண சபையில் நாடு நகர சட்ட மூலத்தை நிராகரித்தோம். இதுவும் கிழக்கு மாகாண சபையில் வரலாற்று நிகழ்வாகும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிதாக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு வயது நான்கரை ஆண்டுகளாகும். இப்போதுதான் அதிகாரங்கள் தொடர்பான முன்னேற்றத்தை கண்டு வருகின்றோம். கிழக்கு மாகாண சபைக்கு கூடுதலான அதிகாரங்களை வழக்க வேண்டும் என நாம் வற்புறுத்தி வருகின்றோம் அதேவேளை நமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாம் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

இன்று கிழக்கு மாகாண சபையில் முக்கியமான நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையில் கட்சிகள் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற ஆசனங்களில் அமர்ந்துள்ளோம். கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஒற்றுமையாக செயல்படுவதன் மூலமே நமது மாகணத்தின் அதிகாரத்தை பெற வாய்ப்பு ஏற்படும்.

இன்று சபையில் உரையாற்றிய உறுப்பினர்கள் சில உடனடியாக கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். இன்னும் ஒரு மாகாண சபை உறுப்பினர் மாகாண சபையின் கதவை பூட்டி விட்டு போக வேண்டும் என்று கூறினார். ஆளும் கட்சியில் இருக்கும் நாங்கள் ஒருபோதும் அரசியல் அதிகாரங்கள் நிரந்தரமானவை என்ற நம்பிக்கையுடன் இருக்கவில்லை. எங்களுக்கு முன்னால் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கதிரைகளை பார்த்தவர்களாகவே உள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சி 17 வருட காலமாக ஆட்சியில் இருந்தது. 1994இல் இன்று வரை பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியில் உள்ளது. இன்னும் எத்தனை வருடங்கள் இந்த ஆட்சி தொடரும் என்பது யாருக்கும் தெரியாது. 17 வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தபோது அன்று நாடாளுமன்றத்தில் 7 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்பீக்கள் மாத்திரம் எதிர் கட்சியில் இருந்தனர்.

பொறுமையாக இருந்து தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1994இல் இருந்து அரசாங்கம் அமைத்தது. அதேபோன்றுதான் இன்று ஐக்கிய தேசிய கட்சி பலவீனம் அடைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைப்பதற்கு நீண்ட காலம் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது.

சபையில் உரையாற்றிய உறுப்பினர் இம்றான் மஃறூப் அவர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைத்ததற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களுக்கும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரேரணை கொண்டு வந்தபோது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் அறிக்கையினை சிபார்சு செய்தார் எனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம்களின் ஹலால் உணவு தொடர்பாக விசேட அமைச்சரவை கூட்டி ஆராய்ந்து உள்ளார். இந்த விடயத்தில் முஸ்லிம் அமைச்சர் எல்லோரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். கிழக்க மாகாண சபையில் கட்சி ரீதியாக முஸ்லிம் உறுப்பினர்கள் செயற்பட்டாலும் சமூகத்தின் பிரச்சினைகள் வரும்போது ஒற்றுமைப்பட்டு செயற்பட்டார் எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X