2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அகஸ்த்தியர் தியான மடத்தின் மீள்கட்டுமாணத்துக்கு அனுமதி வேண்டும்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

தடை ஏற்படுத்தப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள கங்குவேலி அகஸ்த்திய மா முனிவர் தியான மடத்தின் மீள்கட்டுமாணப் பணிகளை ஆரப்பிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே  அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோரின் இணைத்தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'அகஸ்த்திய மா முனிவர் இந்துசமயத்தில் மிக முக்கியமானவர். அவர் இங்கு வந்து தவம் செய்து தங்குவதற்கு ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்டதே இந்த மடமாகும். இந்துக்களின் புனித இடத்தை பராமரிப்பது அவர்களின் கடமையாகும். இதனால், அவற்றை புனர்நிர்மாணம் செய்திருக்கிறார்கள். ஆனால், அது பௌத்தர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அகஸ்த்திய முனிவர் தொடர்பாக சகல ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. இவர் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்;தவர். இது சம்மந்தமாக தீரக்கரை இசைப்புராணம் எனும் நூலில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. இதனுடைய முதல் பதிப்பு 1893ஆம் ஆண்டு வெளிவந்தது. 3ஆவது பதிப்பு வரையும் அந்நூல் வெளிவந்திருக்கிறது.

ஆரம்பகால நில அளவைப்படமும் இது இந்துக்களின் புனித இடம் என்பதை நிரூபிக்கின்றது. இது தவிர இலங்கை அரசாங்கத்தின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் 10,11ஆம் தரங்களுக்கு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சைவசமய பாடநூல்களில்; அகஸ்த்தியர் வாழ்ந்து தவம்செய்த இடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது' என்றார்.

மேலும் சைவசமய புத்தகங்கள், நில அளவைப்படங்கள், தீரக்கரை இசைப்புராணம் ஆகிய ஆவணங்களை மாவட்ட அபிவிருத்திக்குழு அரச உயர்மட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

இந்த ஆவணங்களைப் பார்வையிட்ட திருகோணமலை மாவட்ட அராங்க அதிபர் பதிலளிக்கையில்,

'இந்த அகஸ்த்தியர் மடத்தை புனரமைப்பது சம்மந்தமாக கங்குவேலி பிரதேச மக்கள் என்னிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கிணங்க நான் உரிய இடத்துக்கு நேரில் சென்று பார்த்தேன். நான் ஒரு பௌத்தனாக இருந்தும் இந்த இடத்தில் ஓர் உண்மையைச் சொல்கிறேன். அந்த இடத்தில் பழைய உடைந்த நிலையில் உள்ள சிவலிங்கத்தைக் கண்டேன். இதனால் அவர்களுக்கு பூசைகளைச் செய்வதற்கும் மீள்கட்டுமாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கினேன்.

இதன் பிறகு புதிதாக பிரச்சினை அங்கு தோன்றியிருக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக கொழும்பு தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவித்திருக்கிறேன். அதன் அறிக்கை கிடைத்தவுடன் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .