2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இடைக்கால தடை உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும்?

Editorial   / 2017 செப்டெம்பர் 02 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“வடமாகாண முதலமைச்சரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்” என, வடமாகாண முன்னாள் மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வடமாகாண முதலமைச்சர், ஏனைய அமைச்சர்கள், முன்னை நாள் சுகாதார அமைச்சர், வடமாகாண ஆளநர் ஆகியோருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 30ஆம் திகதி வளக்குத்தாக்கல் செய்துள்ளேன்.

“குறிப்பாக, கடந்த காலங்களில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பாக இருக்கின்றது. ஒரு விடையத்தை கூற முடியும். வடமாகாண ஆளுநர், கடந்த மாதம் 23ஆம் திகதி புதிய அமைச்சர்கள் இருவரை நியமிக்கின்ற அதே சந்தர்ப்பம் கடந்த 20ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் என்னை அமைச்சில் இருந்து நீக்கியதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

“13ஆவது திருத்தச் சட்டத்திலோ அல்லது மாகாண சபைகள் சட்டத்திலோ எந்த ஓர் இடத்திலும் முதலமைச்சர் நியமிக்கப்பட்ட எந்த ஓர் அமைச்சரையும் தானாக நீக்குவதற்கு எந்த ஒரு சட்ட ஏற்பாடுகளும் இல்லை.

“ஆனால், வடமாகாண ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருக்கின்றது. முதலமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்களை அவர் சரியான முறையில் பயன் படுத்தவில்லை.

“கடந்த 20ஆம் திகதி முதலமைச்சர் என்னை தானாக பதவி நீக்கியதே, நான் நீதிமன்றத்தை நாடியமைக்கான காரணமாக உள்ளது.

“சம்மந்தப்பட்டவர்கள் எனது அமைச்சு சார்ந்த வேலைத்திட்டங்களில் தலையிடக்கூடாது என்றும் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளேன்.

“எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அல்லது மிக விரைவாக இரண்டு வாரத்துக்குள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், தங்களுக்கு எதிராக நான் கூறிய விடயங்களுக்கு பதில் கூற வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றம் சரியான முடிவுக்கு வரும்.

“எது எவ்வாறு இருப்பினும், விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்துக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

“ஆரம்பத்தில் இருந்து இன்று வரை நான் போராடிக்கொண்டிருப்பது மீண்டும் அமைச்சுப் பொறுப்பை எடுத்து பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

“எல்லோரும் சட்டத்துக்கு முன் சமன். 13ஆவது திருத்தச் சட்டமும், மாகாண சபைகள் திருத்தச் சட்டமும் மிக சிறிய பக்கங்களைக் கொண்டது. இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே மாகாண சபைகள் இயங்க வேண்டும். இதற்கு புறம்பாக எவறும் செயற்பட முடியாது.

“முதலமைச்சருக்கும், எனக்கும் எந்த விதத்திலும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை. மாகாண சபையை ஏனையவர்கள் கேலியாக சித்தரிக்கின்ற வகையில் மாகாண சபையின் நிர்வாகம் இருக்கின்றது. அவர் ஒரு நீதியரசர். நீதியாக செயற்பட்டிருக்க வேண்டும்.

“ஒரு மாத கட்டாய விடுமுறை விதிக்கப்பட்டமையே, இத்தனை பிரச்சினைக்கும் காரணமாக உள்ளது. நீதியை நிலை நாட்டுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.மேலும், சில முக்கிய நபர்களுக்கு எதிராக சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X