2025 மே 07, புதன்கிழமை

இன்று ஆரம்பமாகிறது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர்

J.A. George   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் முதற்தடவையாக காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.

ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் பிரித்தானியா, கனடா, மொன்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பெச்சலட்டினால் இலங்கை தொடர்பிலான அறிக்கையொன்று ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையவழியில் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

அத்துடன் வௌிவிவகார அமைச்சரின் தலைமையிலான குழுவொன்றும் இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளது.

குறித்த குழுவில் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் ஶ்ரீபால டி சில்வா, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, வலய ஒத்துழைப்பிற்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு குறித்த அனுசரணைமீளப்பெறப்பட்டது.

இதேவேளை, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு கோரி அரசாங்கத்தினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X