Janu / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடிசா மாநிலத்தின் கேந்துஜார் மாவட்டத்தில் அண்மையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இறந்த தனது சகோதரியின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முடியாமல் போன விரக்தியில், அவரது எலும்புக்கூட்டைச் சுமந்து கொண்டு வங்கிக்குச் சென்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேந்துஜார் மாவட்டத்தின் படனா வட்டாரத்தில் அமைந்துள்ள 'ஒடிசா கிராமீன் வங்கி'யின் மாலிபோசி கிளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தியானாலி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜீத்து முண்டா என்பவரின் மூத்த சகோதரி கல்ரா முண்டா, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.
கல்ரா முண்டாவின் வங்கி கணக்கில் சுமார் 19,300 ரூபாய் இருந்துள்ளது. இந்தப் பணத்தை அவர் தனது கால்நடைகளை விற்பனை செய்ததன் மூலம் ஈட்டியிருந்தார். கல்ராவிற்கு வேறு சட்டபூர்வ வாரிசுகள் எவரும் இல்லாத நிலையில், அந்தப் பணத்தைப் பெறுவதற்காக ஜீத்து முண்டா வங்கிக்குச் சென்றுள்ளார்.
ஜீத்து முண்டாவின் கோரிக்கையை ஏற்ற வங்கி அதிகாரிகள், "வங்கி கணக்கு யார் பெயரில் இருக்கிறதோ அவர் நேரில் வரவேண்டும்; இல்லையெனில் அவரது இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுதாரர் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்," என்று அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், படிப்பறிவு இல்லாத ஜீத்து முண்டாவால் அந்தச் சிக்கலான நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது தேவையான ஆவணங்களை உடனடியாகத் திரட்டவோ இயலவில்லை. வங்கியின் பிடிவாதமான அணுகுமுறையால் கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், மிகுந்த விரக்தியுடன் வீடு திரும்பினார்.
வங்கி கேட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாத சூழலில், ஜீத்து முண்டா தனது சகோதரியைப் புதைத்த இடத்திற்குச் சென்று, அங்கிருந்து அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி வெளியே எடுத்தார். பின்னர் அதனை ஒரு துணியால் சுற்றி, சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று வங்கியின் மாலிபோசி கிளையை அடைந்தார்.
சகோதரியின் எலும்புக்கூட்டைச் சுமந்து கொண்டு ஜீத்து முண்டா வங்கிக்குள் நுழைந்த காட்சியைக் கண்டு அங்கிருந்த மக்கள் திகைத்துப் போயினர். ஒரு ஏழை மனிதன் தனது குடும்பப் பணத்தை எடுப்பதற்கு இவ்வளவு கடினமான போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டுமா என்று கிராம மக்கள் ஆவேசமடைந்தனர். வங்கியின் செயல்பாடு மனிதாபிமானமற்றது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீத்து முண்டாவை அமைதிப்படுத்தினர். மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்த காவல்துறையினர், இது குறித்து வங்கியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். தற்போது இப்பிரச்சினையைத் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ள காவல்துறையினர், உரிய ஆவணங்களைப் பெற்றுத் தந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago