2026 ஜனவரி 21, புதன்கிழமை

சர்வக்கட்சி அரசாங்கத்தால் மொட்டு உதிரும் அபாயம்

Freelancer   / 2022 மே 23 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வரசாங்கத்தின் அமைச்சரவை இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை.

அவ்வப்போது புதியவர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்தவர்களில் பலரும், சர்வகட்சி அரசாங்கத்திலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், கடந்த அரசாங்கத்திலிருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டவர்கள் என, பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

மற்ற கட்சிகள் மற்றும் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிமல் சிறிபால டி சில்வா, கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, நளின் பெர்னாண்டோ மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

கட்சியை உடைத்து பிளவை ஏற்படுத்தி விடவேண்டாமென, முன்னாள் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வினயமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிலிருந்து, அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கடும் மோதல் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குழுவினர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை அவ்வப்போது சந்தித்து பல்வேறு தரப்பினர் ஊடாக இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட சுமார் 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், 23 அமைச்சர்களில் பதின்மூன்று பேர் ஏற்கெனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுமார் 10 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், அவர்களில் 5 பேர் ஏற்கெனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மேலும் அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இராஜாங்க அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவை தலைமையாகக் கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருசிலர், இன்றையதினம் (23) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்கக்கூடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சுதந்திரக் கட்சிக்குள் மீண்டுமொரு பிளவு ஏற்படுமென உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அரசியலமைப்பில் 21 ஆவது திருத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான சட்டமூலம், நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவினால், இன்றைய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அந்த திருத்தத்தில், இரண்டை பிரஜைவுரிமை கொண்டவர், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்பதும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இது, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு  நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகையால், 21 ஆவது திருத்தத்தில் மேற்படி விவகாரத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு இடையில் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுவதாக அறியமுடிகின்றது.

கையை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்னும் சிலர் அமைச்சர் பதவிகளை ஏற்பதற்கு தயாராகிவருவதனாலும், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் குறிப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தாமரை மொட்டை சிக்கமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாட்டினாலும், இரு கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருப்பதாக இருக்கட்சிகளின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X