2025 மே 14, புதன்கிழமை

‘டீல் நீடிப்பதால் அமர்வு ஒத்திவைப்பு’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ராஜபக்‌ஷக்களுக்கும் இடையிலான “டீல்” நீடிக்கின்றதெனக் குற்றஞ்சாட்டிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன் காரணமாகவே, நாடாளுமன்ற அமர்வு, ஜனவரி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

“எவ்வாறெனினும், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கப்பட​வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.

கொழும்பு- 02 இலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ, ஹர்ஷ டி சில்வா, நளின் பண்டார, ஹேஷான் விதானகே, எஸ்.எம்.மரிக்கார், சமிந்த விஜேசிறி ஆகியோர் இணைந்து, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை, நேற்று (03) நடத்தினர். இதன்​போதே, மேற்கண்டவாறு அவர்கள் வலியுறுத்தினர்.

அங்கு கருத்துரைத்த ஹரீன் பெர்ணான்டோ எம்.பி, கட்சியின் தலைமைப் பதவியுடன், எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவே தெரிவு செய்யப்படவேண்டும். அதன்பின்னர், டிசெம்பர் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், அரசியல் பிரசார செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்போம் என்றார்.

அதையடுத்துக் கருத்துரைத்த எஸ்.எம்.மரிக்கார் எம்.பி, ஐ.தே.க சிரேஷ்டர்களுக்கு, ராஜபக்‌ஷக்களுடன் உள்ள “டீல்” காரணமாகவே, நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி குறித்த கணக்காய்வு அறிக்கை தொடர்பாக, கோப் குழுவில், அடுத்த அமர்வில் ஆராயப்படவிருந்தது. அதனால்தான், அமர்வு ஒத்திவைக்கப்பட்டது என்றார்.

“இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின், மாற்று வழியில் பயணிப்பது குறித்து, அவதானம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர், ஐ.தே.கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு, கட்சியைப் புதிய வழியில் கொண்டு செல்வதற்கு, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ இணக்கம் தெரிவித்துள்ளார்” என்றார். 

அத்துடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்பட உள்ளதாக வெளிவரும் தகவல்கள், உண்மைக்குப் புறம்பானதெனவும், எதிர்க்கட்சித் தலைவராக வேண்டுமென்ற எண்ணம், கருவுக்குக் கனவிலும் வந்திருக்காதெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார். 

அதேபோல், எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாகப் போலிப்பிரசாரம் செய்யப்பட்டது. ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்பு, அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியாகக்கூட அது இருக்கலாமெனத் தாம் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு, இன்று (03) கூடுவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசமைப்பில் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, எட்டாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை, ஜனவரி 3ஆம் திகதி ஒத்திவைத்தார்.

நான்காவது அமர்வை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது அக்கிராசன உரையுடன் அன்றைய தினம் 10 மணிக்கு ஆரம்பித்துவைப்பார். அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று முன்தினம் (2) வெளியானமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .