2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

கறுப்புக்கொடி போராட்டங்களால் ஸ்தம்பித்தது மலையகம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென கடந்த ஒன்றரை வருடங்களாக நம்பிக்கையுடனும் பெரும் எதிர்ப்பார்ப்புடனும் இருந்த தோட்டத் தொழிலாளர்கள், தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கூறி, நம்பிக்கையிழந்த நிலையில் கடந்த 12 நாட்களாக தொடர் வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

'வாக்குறுதி வழங்கியதைப் போன்று 1,000 ரூபாய் சம்பளத்தை அதிகரி', 'கூட்டொப்பந்த விடயத்தில் பிரதமர் தலையிட வேண்டும்' என்ற உரத்த கோஷங்கள் வலுவலுக்க, தொழிலாளர்கள் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ஊர்வலங்களும் மகஜர் கையளிப்பும், சிதறுத் தேங்காய் உடைப்பும் ஆங்காங்கே நடைபெற்றது. தொழிற்சங்கங்கள் இறங்கி வந்தாலும், முதலாளிமார் சம்மேளனம் வரட்டுப்பிடிவாதத்தில் இருப்பதாக ஆட்சேபித்து, தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரையின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் டயர்களும் எரிக்கப்பட்டன.

பிரதான வீதிகளில் எரியூட்டப்பட்ட உருவ பொம்மைகளையும்  டயர்களையும் பொலிஸார் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மத்திய மாகாணத்தின் பதுளை மாவட்டம், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட ஹம்பகமுவை, கொத்மலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக நடைபெற்றன. சுமார் 15,000 இற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருப்பர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது வாரமாக தொடரும்  தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தால், மலையகத்தின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீதி மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள், உரிய நேரத்துக்கு கடமைகளுக்குச் செல்ல முடியாதுள்ளனர்.

ஹட்டன், டிக்கோயா, கொட்டகலை, வட்டவளை, பொகவந்தலாவை, செனன், மஸ்கெலியா  பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போது பிடிக்கப்பட்ட படங்களில் சில...  (மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்,  செ.தி.பெருமாள்)

தலவாக்கலை, லிந்துலை, அக்கரப்பத்தனை, மெரயா, டயகமை, நாகசேனை உள்ளிட்ட பல இடங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போது பிடிக்கப்பட்ட படங்கள் சில (ஆர்.ரமேஸ், எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜா)

புஸ்ஸல்லாவை, நுவரெலியாவுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களின்போது, எடுக்கப்பட்ட சில படங்கள்  (பா.திருஞானம், எஸ்.தியாகு)

பதுளை, பசறைக்கு உட்பட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (எம்.செல்வராஜா, ஆர்.கோகுலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .