2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாடுதழுவிய ரீதியில் நேற்று 1,000 ரூபாய்க்காக அணிதிரண்டனர் மக்கள்

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயைக் கோரியும், கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியும், ஆயிரம் ரூபாய்க்கான இயக்கம், நாடு தழுவிய ரீதியில் நேற்று (23) முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, பல பிரதேசங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் தொழிற்சங்கங்களே தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், வரலாற்றில் முதற்தடவையாக, 30க்கும் மேற்பட்ட சிவில், பொது அமைப்புகள் ஒன்றிணைந்து, நாடுதழுவிய பாரிய போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்படி, நேற்றுக் காலை 8 மணிக்கு, பொகவந்தலாவ நகரில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், மலையகத்துக்கு வெளியிலும் பல இடங்களில் நடைபெற்றது. குறிப்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் மாணவர்களும் வீதிக்கிறங்கிப் போராடியிருந்தனர்.

இதன்படி, நுவரெலியா, யாழ்ப்பாணம், வவுனியா, ஹட்டன், கேகாலை, தெய்யோவிட்ட, பதுளை, ஹப்புத்தளை, தெமொதர, எட்டம்பிட்டிய, கிளிநொச்சி, மாத்தளை ரத்தோட்ட, மத்துகம, பதுரெலிய, தலவாக்கல்ல, ராகல, தெல்தோட்ட உள்ளிட்ட பல இடங்களிலும் நடைபெற்றது.

பொது அமைப்புகள்

இலங்கை வங்கிச் சேவைச் சங்கம், ஒருமீ - சிவில் சமுக அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்டச் சேவைச் சங்கம், தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், தொழிலாளர் போராட்டத்துக்கான மத்திய நிலையம், தபால் மற்றும் தொலைத்தொடர்புச் சங்கம், உள்நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டமைப்பு, இடதுசாரிகள் குரல், மொன்லார் நிறுவனம், பிரெக்சிஸ் ஒன்றியம், ஊடக சேவை தொழிற்சங்கச் சம்மேளனம், புதிய தலைமுறை, காப்புறுதிச் சேவைச் சங்கம், அரச அச்சகக் கலைஞர்கள் சங்கம், கிறிஸ்தவர்களின் மலையக அமைப்பு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொது, சிவில் அமைப்புகள் நேற்றைய போராட்டத்தின்போது பங்கேற்றிருந்தன.

ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதற்காகவும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நேற்று (23) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதால், பெருந்தோட்டங்கள் பலவற்றின் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பித்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால், பல பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. பிரதான வீதிகளில் அணிதிரண்ட தொழிலாளர்கள், தொழிலாளர் உரிமைக்கான கோஷங்களை எழுப்பியதுடன், தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர்.

பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள்

ருகுணு, ஜயவர்தனபுர, தென்கிழக்கு , சப்ரகமுவ, ரஜரட்ட, களனி, வடமேல்,பேராதனை உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழங்களுக்கு முன்பாகவும் போராட்டங்கள் இடம்பெற்றன.

பதுளை

பதுளை மாவட்டத்தில், ஹப்புத்தளை பகுதியின் ககாகொல்லை, கோணமுட்டாவ, பங்கட்டி, தம்பேதன்னை ஆகிய பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றனர்.

பொகவந்தலாவ

ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி, பொகவந்தலாவவையைச் சேர்ந்த தொழிலாளர்களும் பொகவந்தலாவ நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாத்தளை

நியாயமான சம்பள உயர்வை வலியுறுத்தி, மாத்தளையைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மாத்தளை நகர் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோட்டன்

நோட்டன், ஒஸ்போன் குரூப் தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், காசல்ரீ சந்திவரை கறுப்புக்கொடி ஏந்தி, பேரணியாகச் சென்றனர். மேலும் வட்டவலை, தலவாக்கலை உள்ளிட்ட பெருந்தோட்டப் பகுதிகளிலும் தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுட்டனர்.

ஹட்டன்

ஹட்டன் நகரில், தோட்டச் சேவையாளர் சங்கத்தால் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும் இடையில், பல சுற்றுப் பேச்சுவாத்தைகள் இடம்பெற்ற போதிலும், ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்க, முதலாளிமார் சம்மேளனம் இணங்கவில்லை என்ற நிலையில், ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில், அதன் பிராந்திய அமைப்பாளர் வெத்திலிங்கம் மகேந்திரன் தலைமையில், கந்தப்பளை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய மக்களும், இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டவவை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களின்போது, கறுப்புக்கொடிகள், பெருந்தொட்டத் தொழிலாளர்களை அடையாளப்படுத்தும் கொழுந்துக் கூடை போன்றவற்றை அணிந்து, போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்ந்தால், 2034ஆம் ஆண்டே ஆயிரம் ரூபாய்ச் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கூட்டு ஒப்பந்தத்தினூடாக ஒருபோதும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும், அமைச்சர்களான பழனி திகாம்பரம், வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து, தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சுமத்தினர்.

பிரதான எதிர்ப்புப் பேரணி, சகல பொது அமைப்புகளதும் பங்களிப்புடன், கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி, கொழும்பு போதிமரச்சந்தியில் முடிவடைந்தது. இந்தப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, பெருந்தோட்டத் துறையில் காணப்படும் கல்வி, சுகாதாரத் துறைகளில் காணப்படும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொடுக்காது, இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் குறித்த தொழிற்சங்கங்கள், கையெழுத்திடக்கூடாது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
(படப்பிடிப்பு: சமந்த பெரேரா, மொஹொமட் ஆஸிக், அ.ஷான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X