2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதுமையானதொரு நிகழ்ச்சித்திட்டம்...

Editorial   / 2025 ஜூன் 17 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நற் பண்புகள் போட்டியின் (Honda Purudu Championship) 4ம் பருவகாலத்திற்கான இறுதிப்போட்டிகள் ஏப்ரல் 27ம் திகதி அலரி மாளிகை கேட்போர்கூடத்தில் நடைபெற்றன. றோட்டரி மாவட்ட ஆளுநர் திரு. சுஷேன ரணதுங்க அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பிற கல்வியாளர்கள் நிறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில், நமது நாட்டில் நாம் தொலைத்துள்ள நற்பண்புகளை மீண்டும் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை ஆளுநர் தெளிவுபடுத்தினார். மேடைக் கலைகளைப் பயன்படுத்தி இந்த முக்கியமான நற்பண்புகளைக் கற்று, அவற்றை வெளிப்படுத்தியதற்காக சிறுவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்ததுடன், அவற்றை அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இலங்கையில் உள்ள சிறுவர்கள் சிக்கலான ஒழுக்க நிலை நிறைந்த ஒரு உலகில் பயணிக்கின்றனர். பெரும்பாலும் கருணை, நேர்மை மற்றும் மரியாதை போன்ற அத்தியாவசிய நற்பண்புகளை வளர்ப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் அவர்கள் காணப்படுகின்றனர். நற் பண்புகள் போட்டி என்பது Little Minds Strong Values (LMSV) நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது றோட்டரி அங்கத்தவர் ருக்ஷான் பெரேரா அவர்களின் எண்ணக்கருவில் உதித்ததுடன், கொழும்பு மாநகர றோட்டரி கழகத்தின் ஆதரவுடன், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மத்தியில் விரிவுபடுத்த கல்வி அமைச்சுடன் இணைந்து றோட்டரிக் கழகம் செயல்பட்டு வருகிறது. LMSV ஆனது சிறுவர்களை ஈர்த்து, நற்பண்புகள் உட்பொதிக்கப்பட்ட, வீடியோ வடிவிலான பாடல்களால் ஈடுபாடுகளை வளர்த்து, அவற்றினூடாக முக்கிய நற்பண்புகள் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இந்த நற்பண்புகளை வெளிப்படுத்தவும், பாடசாலைகளில் நாடகங்களை நடத்தவும், மேடைக் கலைகள் மூலம் நற் பண்புகள் போட்டியில் இணைந்து கொள்ளவும் சிறுவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த செயல்முறை சிறுவர்களின் வாழ்க்கையில் (பாடசாலையிலும், வீட்டிலும்) நற்பண்புகள் தொடர்பான கல்வியை முன்னணியாகக் கொண்டு, அடுத்த தலைமுறையை இரக்கமுள்ள மற்றும் பொறுப்பான தலைவர்களாக மாற்றவும் பேரார்வம் கொண்டுள்ளது.

நற் பண்புகள் போட்டி: வருடாந்தம் இடம்பெறும் நற் பண்புகள் போட்டியானது, சிறுவர்கள் மற்றும் பாடசாலைகள் இதில் பங்கேற்பதையும், விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வெல்லவும் அவர்களை ஊக்குவிக்கிறது. இது முன்பள்ளி குழந்தைகள், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கு தனி மற்றும் குழு பிரிவுகளின் கீழ் நடாத்தப்படுகிறது. இதன் துணைப் பலனாக, சிறுவர்கள் மேடைக் கலைகளில் தங்கள் திறமைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர்.

LMSV போட்டியின் 4வது பருவகாலம், குறிப்பிடத்தக்க அளவில் மேம்பாடு கண்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 11,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதில் தீவிர ஆர்வத்துடன் பங்கேற்பத்தைக் காணக்கூடியதாக இருந்தது. பாடசாலைகள் பல்வேறு புதுமையான வழிகளில் LMSV நற்பண்புகளைத் தழுவி, பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கு பயனளிக்கின்றன. ஒட்டுமொத்த போட்டியாளர்கள் மத்தியிலிருந்து தொழில்முறை நடுவர்கள் 140 சிறுவர்களைத் தேர்ந்தெடுத்ததுடன், அவர்கள் கொழும்பில் நடந்த இறுதிப் போட்டிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து, அதாவது யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, காலி, களுத்துறை, கண்டி, பதுளை மற்றும் பல மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து வருகை தந்தனர். சிறுவர்கள் பாடல், நடனம், பேச்சு மற்றும் நாடகம் மூலம் இந்த நற்பண்புகளை ஆர்வத்துடன் வெளிப்படுத்த தங்கள் விருப்பப்படி LMSV பாடல்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்தச் செயல்பாட்டில், அவர்கள் தங்கள் அற்புதமான திறமைகளால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். அழகான ஆடைகளை அணிந்து, இந்த நற்பண்புகளை அவர்கள் விரும்பும் வழிமுறைகளில் வெளிப்படுத்தியதுடன், இந்த பிற்பகல் பொழுதை ஒரு சுவாரசியமான நிகழ்வாக ஆக்கினர்.

இந்த நிகழ்வைப் பற்றி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வியாளர்கள் மிகவும் பாராட்டிப் பேசினர்;, “பாடசாலைகளில் LMSV ஐ அறிமுகப்படுத்தியதற்காக கல்வி அமைச்சு மற்றும் றோட்டரிக் கழகத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்”, “இது சிறந்த ஒழுக்கங்களைக் கொண்ட எதிர்காலத் தலைவர்களை உருவாக்க, சிறுவர்களுக்கான புதுமையானதொரு நிகழ்ச்சித்திட்டம்”, “நமது நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வொரு சிறுவரும் LMSV நிகழ்ச்சித்திட்டத்தின் அனுபவத்திற்கு ஆளாக வேண்டும்”… போன்ற கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினர்.

செயல்முறையை சிறப்பாக முன்னெடுப்பதற்கு விரிவான இணையத்தளம்:WWW.LMSV.LK என்ற LMSV இணையத்தளம், கல்வியாளர்களை ஒருங்கிணைந்த கருவிகளுடன் தங்குதடையற்ற அனுபவத்துடன் இணைக்கும் ஒரு விரிவான தளத்தை வழங்குகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூகம் இணையவழியில் பயிற்சிகள், வழிகாட்டல்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தைக் கற்றுக்கொள்ள அனைத்தையும் இது ஒரே தளத்தில் கிடைக்கச்செய்கின்றது.

இது கொழும்பு மாநகர றோட்டரி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த நிகழ்வாகும். சிறுவர்கள் நற் பண்புகள் போட்டியில் இணைந்து, வாழ்க்கைக்கு முக்கியமான சிறந்த நற்பண்புகளைக் கற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு உதவ முன்வருமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை நாங்கள் வரவேற்கிறோம். இப்போட்டியின் 5வது பருவகாலம் 2025மே மாதத்தில் தொடங்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .