2025 ஜூலை 09, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா கோலியின் இந்தியா?

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அடிலெய்ட்டில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5.30மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகையில், அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்துவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பமாக இது நோக்கப்படுகிறது.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோர் இன்னும் தடையிலிருக்கையிலும் பந்தை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலியா நம்பிக்கைக் குறைவாகவே காணப்படுகிறது. இதுதவிர, ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், புவ்னேஷ்வர் குமார் என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு வரிசையும் பலமானதாகக் காணப்படுகின்ற நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரொன்றில் அவுஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பமாக இத்தொடர் நோக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், மறுபக்கமாக என்னதான் பிரச்சினைகள் காணப்பட்டாலும் சொந்த மண்ணில் அந்தந்த அணிகள் ஜாம்பவான்களாகவே அண்மைய காலங்களில் காணப்படுவதோடு, மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸ் என அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சுவரிசையும் பலமானதாகவே காணப்படுவதுடன், வழமை போன்றே இந்தியாவுக்கெதிரான தொடரெனும்போது அவுஸ்திரேலியர்களிடம் தொற்றிக் கொள்ளும் உற்சாகம் இம்முறையும் இருக்கும் என நம்பலாம்.

ஆக, இரண்டு அணிகளுக்கும் சவாலானதாகவே இத்தொடர் அமையப் போகின்ற நிலையில், அண்மைய வழமை போன்று இந்திய அணியின் முக்கிய வீரராக விராத் கோலியே அமையப் போகின்றார். அவரின் பெறுபேறுகளே நிச்சயமாக இத்தொடரின் போக்கை தீர்மானிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னராகவே, அவுஸ்திரேலிய இந்நாள், முன்னாள் வீரர்களின் கருத்துகளில் கோலியே முதன்மை பெறுகிறார்.

கோலிக்கு, செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் குறுகிய காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக பிரகாசித்த இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிறித்திவி ஷாவை இந்திய அணி இழந்தமை பின்னடைவாகவே நோக்கப்படுகிறது. அதுவும் லோகேஷ் ராகுல் அண்மைய போட்டிகளில் பிரகாசித்திருக்காத நிலையில் அவரின் இழப்பு மேலும் உணரப்படும் எனத் தெரிகிறது.

ஷாவுக்கு பதிலாக முரளி விஜய் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, ஆறாமிடத்தில் சுழற்பந்துவீசக்கூடிய ஹனும விஹாரியையும் கொண்டு ஏழு துடுப்பாட்ட வீரர்கள், இரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் என்ற பந்துவீச்சுக் கூட்டணியுடனேயே இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக உஸ்மான் கவாஜாவே காணப்படுகின்றார். கோலியைப் போல, அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்த வரையில் கவாஜா பெறவுள்ள ஓட்டங்களே அவ்வணியின் வெற்றிவாய்ப்பை தீர்மானிப்பவையாக விளங்கவுள்ளன. ஏனெனில், கவாஜா தவிர்ந்த அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்களெவரும் குறிப்பிடத்தக்கதாக ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, இதற்கு முந்தைய அவர்களது டெஸ்டின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய உஸ்மான் கவாஜா, ஆரோன் பினஞ் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக இம்முறையும் களமிறங்க வேண்டும் என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விரும்புகின்றார்.

எனினும், தட்டையான ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் ஆரம்பத் துடுப்பாட்ட நிலையை ஆரோன் பின்ஞ் சமாளித்திருந்தாலும் வேகமான அவுஸ்திரேலிய வேகமான ஆடுகளங்களை எவ்வாறு சமாளிப்பார் என்ற சந்தேகம் காணப்படுகின்றது. குழாமில் மேலதிக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக புதுமுக வீரர் மார்க்கஸ் ஹரிஸ் குழாமில் காணப்படுகின்றார்.

இது தவிர, அவுஸ்திரேலிய அணியின் ஏனைய இடங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் இறுதி டெஸ்டில் விளையாடியிருந்த மர்னுஸ் லபுஷைனுக்குப் பதிலாக பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் களமிறங்குவதோடு, நேதன் லயோன், ஸ்டார்க், கமின்ஸ், ஹேசில்வூட் என்ற பந்துவீச்சுக் கூட்டணியுடனும் சகலதுறை வீரராக மிற்செல் மார்ஷுடனும் அவுஸ்திரேலியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இந்தியாவும் ஐந்தாமிடத்தில் அவுஸ்திரேலியாவும் காணப்படுகின்ற நிலையில், இத்தொடரில், இந்தியாவை 4-0 என அவுஸ்திரேலியா வெள்ளையடித்தால் முதலிடத்துக்கு அவுஸ்திரேலியா முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, தொடரை வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் அவுஸ்திரேலியா முன்னேறலாம். மறுபக்கமாக, இத்தொடரில் 0-4 என வெள்ளையடிக்கப்படாத எந்தவொரு முடிவு பெறப்பட்டாலும் முதலிடத்திலேயே இந்தியா தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .