2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆஷஸ் இன்று : 18 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கொடி நாட்டுமா அவுஸ்திரேலியா?

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரானது, பேர்மிங்ஹாமில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்டுடன் தொடங்குகின்றது.

இறுதியாக 2001ஆம் ஆண்டே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இங்கிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் இடம்பெறும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தில் வைத்து அவுஸ்திரேலியா வென்ற நிலையில், மீண்டும் ஆஷஸை அவுஸ்திரேலியா கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.

அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சுக் குழாம் காணப்படுகின்றது. ஸ்மித், வோணர் ஓட்டங்களைப் பெற்றால் பலவீனமாகக் காட்சியளிக்கும் இங்கிலாந்தின் துடுப்பாட்டவரிசைக்கு நிச்சயமாக அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக் குழாம் அழுத்தத்தை வழங்கும்.

அதுவும் கடந்த ஆஷஸின் மும்மூர்த்தி வேகப்பந்துவீச்சுக் குழாமிலிருந்த மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோரின் அணியின் இடங்களே நிலையற்றதாக இருக்குமளவுக்கு ஜேம்ஸ் பற்றின்சன், பீற்றர் சிடில் என இங்கிலாந்து ஆடுகளங்களிலும் சிறப்பாகச் செயற்படக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்களை அவுஸ்திரேலியா கொண்டுள்ளது.

மறுபக்கமாக ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட் போன்றோர் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் அவ்வளவாகப் பிரகாசிக்காதபோதும் இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர்களும் விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடியவர்களாகக் காணப்படுவதுடன், இங்கிலாந்தின் உலகக் கிண்ண நாயகர்களான ஜொவ்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சுக் குழாமுக்கு பலம் சேர்க்கின்றனர். எவ்வாறாயினும் இன்று ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டில் ஆர்ச்சர் களமிறக்கப்படுவாரா என்பது சந்தேகமாகவேயுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தின் துடுப்பாட்டவரிசையில் முன்வரிசையே இடியப்பச் சிக்கலாக இருக்கின்ற நிலையில், தமது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜேஸன் றோயை டெஸ்டில் அறிமுகப்படுத்தியதும், அணித்தலைவர் ஜோ றூட் மூன்றாமிடத்தில் களமிறங்கப் போவது சாதகமாக அல்லது பாதகமா என்பது ஒரு சில டெஸ்ட் போட்டிகளின் பின்னரே தெரியவரும்.

அந்தவகையில், இங்கிலாந்து ஆஷஸை வெல்ல வேண்டுமானால் இங்கிலாந்தின் உலகக் கிண்ண நாயகர்களான பென் ஸ்டோக்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, ஜொஸ் பட்லர் ஆகியோரிடமிருந்து தொடர்ச்சியான பெறுபேறுகள் தேவைப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .