2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரண்டாமிடத்தில் கோலி

Editorial   / 2017 டிசெம்பர் 08 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் முதலிரு போட்டிகள், நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆகியவற்றின் பின்னரான, டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில், இந்திய அணியின் விராத் கோலி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்படி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றின் துடுப்பாட்டத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் கோலி, டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டு, தற்போதைய நிலையில் உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரராகத் தானே காணப்படுகிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கெதிரான தொடர் ஆரம்பிக்கும் போது, 806 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் காணப்பட்ட விராத் கோலி, 2 இரட்டைச் சதங்கள் உள்ளடங்கலாக 5 இனிங்ஸ்களில் 152.50 என்ற சராசரியில் 610 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 893 புள்ளிகளைப் பெற்றுள்ள அவர், 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

எனினும், 938 புள்ளிகளுடன் காணப்படும், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறார். அதேபோல், 879 புள்ளிகளுடன் காணப்படும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட், தொடர்ந்தும் மூன்றாவது இடத்தில் காணப்படுகிறார். தவிர, 865 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்தின் தலைவர் கேன் வில்லியம்ஸன், 5ஆவது இடத்தில் காணப்படுகிறார்.

இதன்படி, தற்போதைய கால வரலாற்றில், முன்னணித் துடுப்பாட்ட வீரர்களாக மதிக்கப்படுபவர்களாகவும், முன்னணி அணிகளின் தலைவர்களாக இருப்பவர்களுமான ஸ்டீவன் ஸ்மித், விராத் கோலி, ஜோ றூட், கேன் வில்லியம்ஸன் ஆகியோர், முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.

தவிர, இலங்கை அணியின் டெஸ்ட் தலைவரான டினேஷ் சந்திமால், இந்தியாவுக்கெதிரான தொடரில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இத்தொடரை 20ஆவது இடத்தில் ஆரம்பித்த அவர், 6 இனிங்ஸ்களில் 61 என்ற சராசரியில் 366 ஓட்டங்களைப் பெற்று, 11 இடங்கள் முன்னேறி, 9ஆவது இடத்தில் காணப்படுகிறார். இது, அவர் பெற்றுக்கொள்ளும் சிறப்பான நிலையாகும்.

அதேபோல், அண்மைக்காலப் போட்டிகளில் பங்குபற்றாமலிருந்த அஞ்சலோ மத்தியூஸ், இத்தொடரை 24ஆவது இடத்தில் ஆரம்பித்த நிலையில், முதலிரு போட்டிகளிவும் சொதப்பி, 30ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டார். எனினும், 3ஆவது போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக, 7 இடங்கள் முன்னேறி, 23ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தொடருக்கு முன்னர் 58ஆவது இடத்தில் காணப்பட்ட தனஞ்சய டி சில்வா, தற்போது 47ஆவது இடத்தில் காணப்படுகிறார்.

முதல் 10 துடுப்பாட்ட வீரர்கள்:

ஸ்டீவன் ஸ்மித், விராத் கோலி, ஜோ றூட், செற்றேஸ்வர் புஜாரா, கேன் வில்லியம்ஸன், டேவிட் வோணர், ஹஷிம் அம்லா, அஸார் அலி, டினேஷ் சந்திமால், டீன் எல்கர்.

பந்துவீச்சாளர்களில், ஜேம்ஸ் அன்டர்சன் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கிறார். இலங்கைக்கெதிரான தொடரில், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குப் பிரகாசித்திருக்காத இரவீந்திர ஜடேஜா, 2ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
ஆஷஸில் இதுவரை சிறப்பாகச் செயற்பட்டுள்ள மிற்சல் ஸ்டார்க், 10ஆவது இடத்திலிருந்து 2 இடங்கள் முன்னேறி, 8ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்கள்:

ஜேம்ஸ் அன்டர்சன், கஜிஸ்கோ றபடா, இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ரங்கன ஹேரத், ஜொஷ் ஹேஸல்வூட், நீல் வக்னர், மிற்சல் ஸ்டார்க், நேதன் லையன், டேல் ஸ்டெய்ன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X