2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இலங்கை எதிர் பங்களாதேஷ்: இ-20 தொடர் இன்று ஆரம்பம்

Editorial   / 2018 பெப்ரவரி 15 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடர், மிர்பூரில் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடரில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 10ஆம் இடத்திலிருக்கும் பங்களாதேஷை எட்டாமிடத்திலிருக்கும் இலங்கை எதிர்கொள்கின்றது.

அந்தவகையில், இத்தொடரில் எந்த முடிவு பெறப்பட்டாலும் பங்களாதேஷ் 10ஆம் இடத்திலேயே இருக்கவுள்ள நிலையில், தமது எட்டாமிடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, இத்தொடரை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இலங்கை காண்ப்படுகின்றது.

இத்தொடரை இழந்தாலோ அல்லது சமநிலையில் முடித்துக் கொண்டாலோ தமது எட்டாமிடத்தை ஒன்பதாமிடத்திலிருக்கும் ஆப்கானிஸ்தானிடமிழக்கும் அபாயத்தை இலங்கை கொண்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட அஞ்சலோ மத்தியூஸை காயம் காரணமாக இத்தொடரில் விளையாட முடியாமல் போனமை இலங்கையணிக்கு இழப்பாகவே காணப்படுகின்றது. அதுவும் இவருக்குப் பதிலாக அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இருபதுக்கு – 20 போட்டிகளில் இவர் எவ்வாறு செயற்படுவார் என சந்தேகத்துக்கிடமானதாகவேயுள்ளது.

ஆக, உபுல் தரங்கவுடன் இளம் வீரரான நிரோஷன் டிக்வெல்லவின் துடுப்பாட்டத்திலேயே இலங்கையணியின் வெற்றிவாய்பு காணப்படுகிறது. பந்துவீச்சுப் பக்கம், இசுரு உதான, அமில அபோன்ஸோ, அகில தனஞ்சயவோடு சகலதுறை வீரர்களான திஸர பெரேரா, தசுன் ஷானக, அசேல குணரட்ன ஆகியோர் சிறப்பாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா காயத்திலிருந்து குணமடையாமை காரணமாக, அவரை குசல் மென்டிஸ் பிரதியீடு செய்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷும் காயம் காரணமாக ஷகிப் அல் ஹஸனை இழந்தமை காரணமாக பாரிய வெற்றிடம் காணப்படுகிறது. இன்றைய போட்டியில் பங்களாதேஷுக்கு மகமதுல்லா தலைமை தாங்கவுள்ள நிலையில் ஷகிப் அல் ஹஸனுக்குப் பதிலாக குழாமில் நஸ்முல் இஸ்லாம் இடம்பெற்றுள்ளார்.

ஷகிப் அல் ஹஸன் இல்லாத நிலையில், முஷ்பிக்கூர் ரஹீம், தமிம் இக்பால், மகமதுல்லா ஆகியோரையே துடுப்பாட்டப் பக்கம் பங்களாதேஷ் முழுமையாக நம்பியுள்ளது. இவர்கள் தவிர, குழாமில் இடம்பெற்றுள்ள சபீர் ரஹ்மான், செளமியா சர்க்கார் ஆகியோர் ஓட்டங்களைப் பெற்று தம்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.

பந்துவீச்சுப் பக்கம், முஸ்தபிஸூர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன் தவிர்ந்த அனைவரும் புதியவர்களாக இருக்கின்ற நிலையில் இவர்கள் இருவர் மீதே பெறுபேற்றை வழங்க வேண்டிய அழுத்தம் காணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .