2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இங்கிலாந்து?

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கேப் டெளணில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

நான்கு போட்டிகளைக் கொண்ட இரண்டு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியைத் தளுவிய இங்கிலாந்து, தொடரைத் தக்க வைப்பதற்கு இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு பின்னடைவை வழங்கக் கூடிய செய்தியாக முழங்கை உபாதை காரணமாக முதலாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜொவ்ரா ஆர்ச்சர், இப்போட்டியில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாக உள்ளது.

அந்தவகையில், இந்த இரண்டாவது டெஸ்டுக்கான முதலாவது டெஸ்டுக்கான ஆடுகளம் போன்று பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்காது என்று கருதப்படுகின்ற நிலையில், ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்குவது குறித்து இங்கிலாந்து ஆராய்கையில் ஜொவ்ரா ஆர்ச்சரை டொம் பெஸ் பிரதியிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இங்கிலாந்துக் குழாமில் முதன்மைச் சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச்சின் உடல்நிலை ஏறத்தாழ ஒரு மாதத்தின் பின்னர் தற்போதே சீரடைந்துள்ளதுடன், மேலதிகச் சுழற்பந்துவீச்சாளர் மற் பார்க்கின்ஸனின் பெறுபேறுகள் எதிர்பார்த்தபடி கிடைக்காத நிலையிலேயே டொம் பெஸ் முதன்மைச் சுழற்பந்துவீச்சாளராக அணியில் இடம்பெறும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஜொவ்ரா ஆர்ச்சர் உடற்றகுதியைப் பெற்று இரண்டாவது டெஸ்டில் விளையாடும் பட்சத்தில் சிரேஷ்ட பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனை டொம் பெஸ் பிரதியிடலாம். தவிர, ஜொவ்ரா ஆர்ச்சர் விளையாடாமல், டொம் பெஸ் அணியில் இடம்பெறும் சந்தர்ப்பத்திலும் ஜேம்ஸ் அன்டர்சனை கிறிஸ் வோக்ஸ் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதேவேளை, துடுப்பாட்டப் பக்கமாக ஜொனி பெயார்ஸ்டோவை மீண்டும் உடற்றகுதியைப் பெற்றுள்ள ஒலி போப் பிரதியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தவிர, ஒலி போப், ஜேம்ஸ் போக்ஸ் ஆகியோர் இருக்கின்ற நிலையில் தனது இடத்தை உறுதிப்படுத்துவதற்கு விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் உள்ளார்.

அந்தவகையில், இங்கிலாந்து இப்போட்டியில் வெல்வதற்கு றோறி பேர்ண்ஸ், ஜோ டென்லி, அணித்தலைவர் ஜோ றூட் ஆகியோரில் ஒருவர் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையொன்றைப் பெறுவது அவசியமாகின்றது.

மறுபக்கமாக காயம் காரணமாக ஏய்டன் மர்க்கரம் தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவரைப் பிரதியிட்டு பீற்றர் மலன் அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தெம்பா பவுமா குணமடைந்துள்ள நிலையில், அவரது இடத்தில் விளையாடிய றஸி வான் டர் டுஸன் முதலாவது டெஸ்டில் அரைச்சதத்தைப் பெற்ற நிலையில் திரிசங்கு நிலையை தென்னாபிரிக்கா எதிர்கொள்கிறது.

ஏனெனில், சராசரியாக இரண்டு கறுப்பினவீரர்களை தென்னாபிரிக்கா கொண்டிருக்க வேண்டியுள்ளபோதும், தெம்பா பவுமாவின் அண்மைய பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அந்தவகையில் தெம்பா பவுமாவை அணிக்குள் கொண்டு வர வேண்டுமானால் முதலாவது போட்டியில் சராசரியாகச் செயற்பட்ட டுவைன் பிறிட்டோரியஸை அணியிலிருந்து நீக்க வேண்டும்.

ஆனால், டுவைன் பிறிட்டோரியஸ் தென்னாபிரிக்காவுக்கு சமநிலையை வழங்கியிருந்தார். ஆக, அணித் தெரிவில், தென்னாபிரிக்க அணித்தலைவர் பப் டு பிளெஸி, தலைமைப் பயிற்றுவிப்பாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .