2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தொடரைத் தக்க வைக்குமா மே. தீவுகள்?

Editorial   / 2020 பெப்ரவரி 26 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது (ODI), ஹம்பந்தோட்டையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வென்றிருந்த நிலையில், தொடரைத் தக்க வைப்பதற்கு இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றாக வேண்டியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் அண்மைய காலங்களில் தமது ஒருநாள் சர்வதேசப் போட்டி இனிங்ஸ்களை கட்டமைத்தது போல அவர்கள் கொண்டு சென்றிருந்தபோதும், இனிங்ஸின் இறுதிப் பகுதியில் அணித்தலைவர் கெரான் பொலார்ட், நிக்கலஸ் பூரான், ஜேஸன் ஹோல்டர் போன்ற அதிரடியாக விளையாடக்கூடிய வீரரொருவர் களத்தில் நின்றிருந்தால் அவ்வணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

ஆகவே, கடந்த போட்டியில் விட்ட குறித்த தவறை நிவர்த்தி செய்ய மேற்கிந்தியத் தீவுகள் நிச்சயம் முயலும் என்பதோடு ஒவ்வொரு போட்டிக்கும் நிலையான ஆரம்பத்தைப் பெறுவதற்கு ஷே ஹோப்பையே எதிர்பார்க்க முடியாது என்பதால் குழாமில் பிரண்டன் கிங் இருக்கின்ற நிலையில் சுனில் அம்பிறிஸிடமிருந்து மேம்பட்ட பெறுபேறுகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

இதேவேளை, பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் ஓட்டங்களை வழங்கியிருந்தபோதும் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில் கடந்த போட்டியில் விளையாடிய அதேயணியே இப்போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மறுபக்கமாக இலங்கையணி சார்பில் அவிஷ்க பெர்ணான்டோ, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, குசல் மென்டிஸ் என முதல் நான்கு துடுப்பாட்டவீரர்களும் ஓட்டங்களைப் பெற்றபோதும், திஸர பெரேரா, வனிடு ஹஸரங்கவின் பங்களிப்பில் இறுதி ஓவரிலேயே கடந்த போட்டியில் இலங்கை வென்றிருந்த நிலையில், முதல் நான்கு துடுப்பாட்டவீர்களில் ஒருவர் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடுவது அவசியமாகிறது.

அதிலும் திறமை இருக்கின்றபோதும் தொடர்ந்து வழங்கப்படும் வாய்ப்புகளை நியாயப்படுத்தும் வகையில் குசல் மென்டிஸ் ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

இந்நிலையில், ஹம்பந்தோட்டை ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் எனக் கருதப்படுகின்ற நிலையில் லக்‌ஷன் சந்தகானை இலங்கையணியில் லஹிரு குமார பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .