2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்து எதிர் இந்தியா: ODI தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடர் நாளை ஆரம்பிக்கின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரானது, ஹமில்டனில் இலங்கை நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் தோல்வியைத் தொடர்ந்து இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் 5-0 என இந்தியாவால் வெள்ளையடிக்கப்பட்ட நியூசிலாந்து மிகுந்த அழுத்தத்துக்கு மத்தியில் இத்தொடரை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், தமது அணித்தலைவர் கேன் வில்லியம்சனிலிருந்து மீள் எழுச்சியை நியூசிலாந்து எதிர்பார்த்த நிலையில், காயம் காரணமாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்ற செய்தி நியூசிலாந்துக்கு பின்னடைவாகக் காணப்படுகிறது.

அந்தவகையில், சிரேஷ்ட வீரர்களான றொஸ் டெய்லர், மார்டின் கப்தில், டொம் லேதம் உள்ளிட்டோர் தமது பொறுப்புணர்ந்து செயற்படவேண்டியவர்களாக உள்ளன.

இந்நிலையில், லொக்கி பெர்கியூசன், ட்ரெண்ட் போல்ட், மற் ஹென்றி, அடம் மில்ன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் காயத்துடன் காணப்படுகின்ற நிலையில், ஹமிஷ் பெனிட், ஸ்கொட் குக்லஜின், அறிமுக வீரர் கைல் ஜேமிஸன் உள்ளிட்டோரை வழிநடத்த வேண்டியவராகக் காணப்படும் டிம் செளதி, தனது பெறுபேறுகளை குறிப்பிடத்தக்களவு உயர்த்திக் கொள்ள வேண்டியுள்ளது.

ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் காயமடைந்த ரோஹித் ஷர்மா இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் எஞ்சிய பகுதியை தவறவிடுகின்றமை நியூசிலாந்துப் பந்துவீச்சாளர்களுக்கு இனிப்பாக இருந்தாலும், இந்திய அணித்தலைவர் விராட் கோலி, மீள் எழுச்சி பெற்றுள்ள லோகேஷ் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டியுள்ளது.

அந்தவகையில், ரோஹித் ஷர்மா இத்தொடரைத் தவறவிடுகின்ற நிலையில், அவருக்குப் பதிலாக மாயங்க் அகர்வால் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளபோதும், லோகேஷ் ராகுலுடன் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக ஏற்கெனவே குழாமிலுள்ள பிறித்திவி ஷாவே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அண்மைய கடந்த காலங்களில் தொடர் வாய்ப்புகளைப் பெறும் மனிஷ் பாண்டே, கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயற்படுகின்றமை இந்தியாவுக்கு மத்திய களத்தில் உறுதியை வழங்குகின்ற நிலையில், தனது வாய்ப்புக்காக றிஷப் பண்ட் காத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சுப் பக்கமும் காயத்திலிருந்து திரும்பிய ஜஸ்பிரிட் பும்ரா பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதோடு, மொஹமட் ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர், இரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் என அனைவரும் அணிக்கு பலம்சேர்க்கின்ற நிலையில், அணியில் இடம்பெறப்போகும் ஐவர் யார் என ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ரோஹித் ஷர்மாவை பிறித்திவி ஷா பிரதியிட்டுள்ளார்.

சுழற்பந்துவீச்சாளர்களாக இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா ஆகியோர் மாத்திரமே இடம்பிடித்துள்ளனர். குல்தீப் யாதவ் குழாமில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இஷாந்த் ஷர்மா குழாமில் இடம்பெற்றிருக்கின்றபோதும் உடற்றகுதியைப் பொறுத்தே அவர் இறுதியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்.

குழாம்: விராட் கோலி (அணித்தலைவர்), மாயங்க் அகர்வால், பிறித்திவி ஷா, ஷுப்மன் கில், செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ஹனும விஹாரி, ரித்திமான் சஹா, றிஷப் பண்ட், இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் ஷர்மா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .