2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்தைக் கட்டுப்படுத்துமா இலங்கை?

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கையணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், மெளன்ட் மகட்டரேயில் இலங்கை நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை, அத்தொடரில் தமது நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸை ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இழந்துள்ளமை நிச்சயமாக அவ்வணிக்கு பாதிப்பாகவே நோக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், டெஸ்ட் தொடரில் பிரகாசித்த குசல் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு குமார தினேஷ் சந்திமாலை அணியில் கொண்டிருப்பது இலங்கைக்கு நம்பிக்கையை வழங்குவதுடன், ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமுக்கு நீண்ட இடைவேளையின் பின்னர் திரும்பியுள்ள அசேல குணரட்ன மற்றும் புதிய அணித்தலைவர் லசித் மலிங்க, திஸர பெரேராம் தசுன் ஷானக ஆகியோர் அணியில் இணைந்து கொள்வது நிச்சயமாக இலங்கைக்கு பலத்தை வழங்கும்.

எனினும், கடந்த காலமாகவே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறிவரும் இலங்கையணி, நியூசிலாந்தின் தட்டையான குறுகிய மைதானங்களில் வெல்வதற்கு தமது அதிரடி வீரர்கள் அனைவரினதும் ஒன்றிணைந்த பெறுபேற்றை வேண்டி நிற்கிறது.

மறுபக்கம், இவ்வாண்டு உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான தயார்படுத்தலொன்றாகவே இத்தொடரும் நோக்கப்படுகின்ற நிலையில், ஓரளவு கால இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பியுள்ள டவ் பிறெஸ்வெல், ஜேம்ஸ் நீஷம் போன்றோர் அணியில் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் தமதிடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையிலுள்ளனர்.

இது தவிர, வழமையான விக்கெட் காப்பாளர் டொம் லேதமுக்கு ஓய்வு வழங்கப்பட்டு டிம் செய்வேர்ட்டுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் குழாமில் தனதிடத்தை உறுதிப்படுத்துக் கொள்வதற்கான அவருக்கான சந்தர்ப்பமாக இத்தொடர் காணப்படுகின்றது.

இதேவேளை, காயத்திலிருந்து குணமடைந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மார்டின் கப்தில் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில் அதுவும் நிச்சயமாக நியூசிலாந்துக்கு பலத்தை வழங்கும்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மூன்றாமிடத்தில் நியூசிலாந்து காணப்படுவதோடு, எட்டாமிடத்தில் இலங்கை காணப்படுகின்ற நிலையில், இத்தொடரின் எந்த முடிவும் இலங்கையின் நிலையில் தாக்கம் செலுத்தாதென்றபோதும் 3-0 என இத்தொடரை வெள்ளையடித்தால் மாத்திரமே மூன்றாமிடத்தில் நியூசிலாந்து தொடருமென்பதோடு, வேறெந்த முடிவு பெறப்பாட்டாலும் நான்காமிடத்துக்கு நியூசிலாந்து கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .