2025 ஜூலை 05, சனிக்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, பல்லேகலவில் நாளை மறுதினம் இரவு ஏழு மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஆறாமிடத்தில் நியூசிலாந்தும், எட்டாமிடத்தில் இலங்கையும் காணப்படுகின்ற நிலையில், இத்தொடரின் எந்தவொரு முடிவும் அணிகளின் தரவரிசையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவராதென்றபோதும், அடுத்தாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இத்தொடர் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

இலங்கைக் குழாமைப் பொறுத்தவரையில், சிரேஷ்ட வீரர்களான முன்னாள் அணித்தலைவர்கள் அஞ்சலோ மத்தியூஸ், திஸர பெரேரா இல்லாமல் லசித் மலிங்க தலைமையிலான இளம் குழுவொன்று இத்தொடரில் களமிறங்குகின்றது.

அந்தவகையில், பந்துவீச்சுப் பக்கம் லசித் மலிங்கவிலேயே பிரதானமாக தங்கியுள்ளதுடன், பந்துவீச்சுப்பாணி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலும் குழாமில் அகில தனஞ்சய இடம்பெற்றுள்ள நிலையில் அவரது தன்னம்பிக்கையளவு எவ்வளவு உள்ளதென தெரியாத நிலையில், லசித் மலிங்கவுக்கு, கசுன் ராஜித, இசுரு உதான போன்றோர் ஆதரவளிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

அண்மைய காலங்களில், இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான சுழற்பந்துவீச்சாளராக செயற்பட்டிருந்த தனஞ்சய டி சில்வா இல்லாத நிலையில், அவரின் இடத்தை வனிடு ஹசரங்க, ஷெகான் ஜெயசூரியா உள்ளிட்டோரே நிரப்ப வேண்டியுள்ளது.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில், குஷல் பெரேரா, குசல் மென்டிஸ், தசுன் ஷானக உள்ளிட்டோருடன், நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக, அவிஷ்க பெர்ணான்டோ பெறுபேற்றை வெளிப்படுத்தும் பட்சத்தில் நியூசிலாந்துக்கு இலங்கை கடின சவாலையளிக்கும்.

நியூசிலாந்தைப் பொறுத்தவரையில், அவ்வணியின் தலைவர் கேன் வில்லியம்சன், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டபோதும், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்த வரையில் ஆபத்பாந்தவனாக இருக்கும் நியூசிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கொலின் மன்றோ, றொஸ் டெய்லர் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுவதுடன், மார்டின் கப்தில், டொம் ப்றூஸ், டிம் செய்ஃபேர்ட், டரைல் மிற்செல்லிடமிருந்தும் நியூசிலாந்து பெறுபேறுகளை எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவுக்கு சாதகமான பல்லேகலவிலேயே இடம்பெறவுள்ள நிலையில், டிம் செளதி, லொக்கி பெர்கியூசன், கொலின் டி கிரான்ட்ஹொம், செத் றான்ஸ் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுவதுடன், விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடிய இஷ் சோதி, ஓட்டங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய மிற்செல் சான்ட்னெரும் தேவைப்படும் வீரர்களாக உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .