வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில், அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்தக் கிண்ணத்திற்கான ‘பேட்ச் பெட்டில் லீக்’ (Batch Battle League - 2026) கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஆறாவது வருடமாக இம்முறை மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் மற்றும் டைனமிக் விளையாட்டுக்கழகம் இணைந்து நடத்திய இத்தொடர், டைனமிக் விளையாட்டுக்கழகத் தலைவர் எஸ். டனிஸ்காந் தலைமையில் இடம்பெற்றது.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இச்சுற்றுத்தொடரின் இறுதிநாள் நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இவருடன் இன்னும் பல முக்கிய அதிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆண்களுக்கான போட்டி: இருபது அணிகள் பங்கேற்ற ஆண்களுக்கான பிரிவில், 2012ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு (2012 A/L Batch) ‘பயர் ஹோர்சஸ்’ (Fire Horses) அணியினர் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர். ‘ஸ்கோபியன்ஸ்’ (Scorpions - 2022 A/L Batch) அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ‘பயர் ஹோர்சஸ்’ அணியினர் 52 ஓட்டங்களைப் பெற்றனர். 53 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய ‘ஸ்கோபியன்ஸ்’ அணியினர் 47 ஓட்டங்களை மாத்திரமே பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தனர்.
பெண்களுக்கான போட்டி: எட்டு அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான பிரிவில், ‘ரிவெஞ்சர்ஸ்’ (Revengers - 2021 A/L Batch) அணியினர் சம்பியனாக மகுடம் சூடினர். ‘ரோயல் பிளாஸ்டர்ஸ்’ (Royal Blasters - 2025 A/L Batch) அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
விருதுகள்:
• ஆட்டநாயகன்: சர்மிலகாந்த் (பயர் ஹோர்சஸ் அணி)
• சிறந்த பந்துவீச்சாளர்: சனோசன்
• தொடர் ஆட்டநாயகன்: சுலக்ஷன் (டைட்டன்ஸ் அணி)
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அதிதிகளால் கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்று வரும் பிபிஎல் (BPL) தொடரில், ‘பயர் ஹோர்சஸ்’ அணி நான்கு முறை சம்பியனாகவும், இரண்டு முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.