2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஹேரத்தின் இறுதி டெஸ்ட்: மழை தடுக்குமா?

Editorial   / 2018 நவம்பர் 06 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இன்று (05) ஆரம்பிக்கின்ற போதிலும், டெஸ்ட் தொடரின் ஆரம்பம் என்பதைத் தாண்டி, இன்னொரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கை சார்பில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரங்கன ஹேரத்தின் இறுதி டெஸ்டாக இது அமைவதே, அதற்கான காரணமாகும்.

காலியில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, அதிகமான கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில், இப்போட்டியில், மழையின் குறுக்கீடு எந்தளவுக்கு இருக்குமென்பதே, தற்போதுள்ள கேள்வியாக உள்ளது.

காலியின் இந்த ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்படும் நிலையில், மழை தொடர்ந்து பெய்யுமாயின், சுழற்பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு உதவி காணப்படுமென்பது சந்தேகமே. எனவே தான், காலி பகுதியில் எவ்வகையான வானிலை நிலவும் என்பது, இப்போட்டிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

இதுவரையான தகவல்களின் அடிப்படையில், காலியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளே உள்ளவெனத் தெரிவிக்கப்படுகிறது.

வானிலையும் அதன் தாக்கங்களும் ஒருபக்கமிருக்க, அவற்றைத் தாண்டி, சுவாரசியமான டெஸ்ட் தொடராக இது அமைவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன.

இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டிகளில் மிகவும் பலமான அணிகளில் ஒன்றாக இருக்கின்ற போதிலும், இலங்கை அணி, டெஸ்ட் போட்டிகளில் -- குறிப்பாக இலங்கையில் வைத்து -- பலமான ஓர் அணியாகவே காணப்படுகிறது. எனவே, சுவாரசியமாக தொடராக இது அமையக்கூடும்.

அதிலும், ஹேரத்தின் இறுதி டெஸ்ட் என்பதால், வெற்றியுடன் அவரை அனுப்பிவைப்பதற்கு, இலங்கை அணி தயாராக உள்ளது.

திமுத் கருணாரத்ன, டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் ஆகிய அனுபவ வீரர்களோடு, இளம் வீரரான குசல் மென்டிஸும், இலங்கைக்குப் பலத்தை வழங்குகின்றனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத்தின் மாஜாஜாலம், டில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய ஆகியோர் தங்கியிருக்கக்கூடிய பந்துவீச்சு ஆகியன, இலங்கைக்கு மிகப்பெரிய பலங்களாக உள்ளன.

ரங்கன ஹேரத், இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், இப்போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியோரின் பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி, 7ஆவது இடத்தைப் பிடிப்பார் என்பதால், அது தொடர்பிலும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டம் தொடர்பில் கேள்விகள் உள்ள போதிலும், ஜோ றூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர், அவ்வணியின் துடுப்பாட்டத்தில் பலமாக உள்ளனர். பந்துவீச்சில், மொய்ன் அலி, அண்மைக்காலத்தில் சிறப்பாகப் பந்துவீசியவர் என்பதால், அவர் மீது எதிர்பார்ப்புகள் உள்ளன. ஜேம்ஸ் அன்டர்சனின் ஸ்விங்குக்கான வாய்ப்புகள் ஏற்படுமாயின், எதிர்கொள்ள முடியாத பந்துவீச்சாளராக அவர் மாறுவார். அதேபோல், அண்மைக்காலத்தில் எதிர்பார்ப்புக்குரிய வீரராக மாறியுள்ள சாம் கர்ரன், இலங்கை ஆடுகள நிலைமைகளில் எவ்வாறு விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இங்கிலாந்து அணிக்கானக இழப்பாக, அவ்வணியின் விக்கெட் காப்பாளரும் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரருமான ஜொனி பெயர்ஸ்டோ, இப்போட்டியில் காயம் காரணமாக விளையாட மாட்டார். ஆனால் ஜொஸ் பட்லரும், மிகச்சிறந்த விக்கெட் காப்பாளர் என்பதால், இங்கிலாந்து அணி பெரிய இழப்பைச் சந்திக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X