2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

DRS இருந்திருந்தால் வோண் காலி: பீற்றர்சன்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 19 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கொண்டோர் பட்டியலில் இரண்டாமிடத்தில் காணப்படுபவருமான ஷேன் வோணைப் புகழ்ந்துள்ள இங்கிலாந்து அணியின் கெவின் பீற்றர்சன், நல்ல முறையில் தன்னில் தாக்கத்தைச் செலுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கெவின் பீற்றர்சனின் புதிய நூலான 'கிரிக்கெட்டில்", ஷேன் வோண் பற்றிய அவரது பகுதி, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிலேயே, மேற்படி விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்ப்ஷையர் பிராந்திய அணியில் தான் விளையாடும் போது, அதன் தலைவராக ஷேன் வோண் இருந்த காரணத்தால், ஷேன் வோண் தொடர்பில் ஏனையோருக்கு இருந்த அச்சம், தன்னிடம் காணப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர், இங்கிலாந்துக்காக விளையாடும் போது, தன்னிடம் கதைக்க முயன்றால், 'வாயை மூடுங்கள் ஷோன் வைன், ஷோன் வைன்" என, அவரது பெயரைத் தவறாக உச்சரித்து, அவரோடு மோதுவாரெனவும், தெரிவித்தார்.

வெளிப்புறத்தில், ஷேன் வோண் மீது வேறு மாதிரியான விம்பம் காணப்படுகின்ற போதிலும், ஒரே அணியில் விளையாடும் போது, அவர் மிகுந்த மரியாதைக்குரியவர் எனவும், மிகவும் நல்லவர் எனவும் தெரிவித்துள்ள அவர், எப்போது கேட்டாலும், உதவி, வழிகாட்டக்கூடியவர் எனவும் தெரிவித்தார்.

ஷேன் வோணைப் பொறுத்தவரை, அவரது பந்துவீசும் முறையைச் சரியாகக் கவனித்தாலும், அவரது ஆளுகை காரணமாகவே, விக்கெட்டுகளை இழப்பது அதிகமெனக் குறிப்பிடும் பீற்றர்சன், ஆட்டமிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைந்த பந்துகளைக் கூட, ஆட்டமிழக்க வைக்கக்கூடிய பந்துகள் போன்று அவர், காட்டிக் கொள்வார் எனத் தெரிவித்தார். இதன்காரணமாக, நடுவர்களும் கூட, அழுத்தத்துக்குள்ளாகி, ஆட்டமிழப்பற்ற சந்தர்ப்பங்களிலும் ஆட்டமிழப்பை வழங்குவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பந்துவீச்சுப் பற்றி எப்போதும் கதைக்கும் போது, 'நான் விளையாடும் காலத்தில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம் இருந்திருந்தால், எனக்கு அதிக விக்கெட்டுகள் கிடைத்திருக்கும்" என்று ஷேன் வோண் கூறுவதாகவும், ஆனால், மேலே சொன்ன காரணத்தால், நடுவர் மீள்பரிசீலனைத் திட்டம் இருந்திருந்தால், நடுவர்களின் தவறான தீர்ப்புகள் திருத்தப்பட்டிருக்குமென்பதால், ஷேன் வோணுக்குக் குறைவான விக்கெட்டுகளே காணப்படுமென அவரிடம் எப்போதும் தெரிவிப்பதாகவும் பீற்றர்சன் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியில், ஷேன் வோணை 'களிப்பான கொலைகாரன்" எனக் குறிப்பிடும் பீற்றர்சன், றிக்கி பொன்டிங்கை 'ஆக்ரோஷமான கொலைகாரன்" எனவும், இலங்கையின் முத்தையா முரளிதரனை 'அமைதியான, புன்னகைக்கும் கொலைகாரன்" எனக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .