.jpg)
இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இன்றைய முதலாவது போட்டியில் அடம் கில்கிறிஸ்ற்றின் அதிரடியால் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக அவ்வணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
பெங்களூர் எம்.சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைக் குவித்தது.
முதலாவது விக்கெட்டை 4.1 ஓவர்களில் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இழந்த அவ்வணி, அதன் பின்னர் அதிரடியாக ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்காக 136 ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன.
துடுப்பாட்டத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக கிறிஸ் கெயில் 53 பந்துகளில் 77 ஓட்டங்களையும், விராத் கோலி 43 பந்துகளில் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பர்வீந்தர் அவானா 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அஷார் மஹ்மூட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதலாவது விக்கெட்டை 24 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களை வெறுமனே 12.5 ஓவர்களில் குவித்திருந்தது. அதன் காரணமாக வெற்றி இலகுவானது.
அதிரடியாக ஆடிய அடம் கில்கிறிஸ்ற் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களைக் குவித்தார். தவிர, அஷார் மஹ்மூட் 41 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்தார்.
பந்துவீச்சில் சகீர் கான் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், ஜெய்தேவ் உனத்கட் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், முத்தையா முரளிதரன் 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக அடம் கில்கிறிஸ்ற் தெரிவானார்.