
உலகின் தலை சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் ஜக்ஸ் கலிஸ் தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று இருந்த இவர் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடர் வரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் நோக்கில் இருந்தார். இருப்பினும் அண்மைக்காலமாக ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் இவருக்கு இடம் வழங்கப்படவில்லை. உலகக்கிண்ணத்திற்கு தயார் செய்யும் நோக்கில் இலங்கை தொடரில் இவருக்கு இடம் வழங்கப்பட்டது. ஓட்டங்களைப் பெற ஜக்ஸ் கலிஸ் தடுமாறியதுடன் அணியில் இடத்தை தொடர்ந்து தக்க வைக்கக் கூடிய அளவில் ஓட்டங்களைப் பெறவும் இல்லை. இந்த நிலையில் தான் சகலவித சர்வதேசப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
39 வயதான ஜக்ஸ் கலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் 13,289 ஓட்டங்களை 45 சதங்களுடன் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கூடுதலான சதங்களைப் பெற்றவர்களில் இரண்டாமிடத்தில் இவர் உள்ளார். 292 விக்கெட்களையும் டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியுள்ள இவர் 328 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 11579 ஓட்டங்களையும், 273 விக்கட்களையும் கைப்பற்றியுள்ளார். 25 ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் 666 ஓட்டங்களையும் 12 விக்கெட்களையும் ஜக்ஸ் கலிஸ் கைப்பற்றியுளார்.
சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள போதும் தொடர்ந்து பிக் பாஷ் லீக், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவார்.
இலங்கையில் வைத்து நான் உணர்ந்து கொண்டேன் எனது உலகக் கிண்ண கனவு சரி வராது என. அத்துடன் தற்போதுள்ள அணி மிக சிறப்பாக உள்ளது. இவர்களால் வரும் மார்ச் மாதம் உலகக் கிண்ணத்தை தென் ஆபிரிக்காவிற்கு எடுத்து வர முடியும். தென் ஆபிரிக்கா அணிக்காக விளையாடிய காலம் மிக அற்புதமானது. தென் ஆபிரிக்கா கிரிக்கெட் சபை, அனுசரணையாளர்கள், ஆதரவளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவதுக் கொள்கின்றேன் என ஜக்ஸ் கலிஸ் தெரிவித்துள்ளார்.