2021 ஜூலை 26, திங்கட்கிழமை

இளம் சமூதாயத்தை ஆன்மிக அறநெறிகளால் வழிநடத்த வேண்டும்

Sudharshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாட்டில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களை ஒழிக்க வேண்டுமானால் இளம் சமூதாயம் சிறந்த ஆன்மிக அறநெறிகளால் வழிகாட்டப்பட வேண்டும் என திருகோணமலை உதயம் மறுவாழ்வு அமைப்பின் பொதுச் செயலாளர் ஜே. ஷர்மிலா தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை திருமலைப்பட்டினம், நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள குணா இந்து அறநெறிக் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பௌத்த, ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிற்பற்றும் சமூகங்களைச் சேர்ந்த அறநெறி கற்கும் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடராக இந்நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், 'எமது  உதயம் மறுவாழ்வு அமைப்பின் நோக்கங்களில் பிரதானமானது, எல்லா மதங்களையும் சேர்ந்த அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதாகும்.

ஏன் இதனை எமது அமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக நாம் கருதினோமென்றால், மனித நேயத்தைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு அறநெறிகள் உதவுகின்றன. அதனால், பௌத்த, ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களை உயர்வு தாழ்வின்றி சமமாகக் கருதி உதவ நாம் முடிவெடுத்தோம்' என்றார்

'அறநெறிக் கொள்கைகளால் மானிட விழுமியத்தை வடிவமைக்க வேண்டிய சம காலத் தேவை உணரப்பட்டுள்ளதால் அதற்கு உதவ முன்வந்துள்ளோம். ஒழுக்க விழுமியங்களை உணர்த்துவதற்கு தகுந்த கால எல்லை இளம் பராயமாகும். 

அந்த அற்புதமான கள்ளங்கபடமற்ற வயதில் மனப்பாங்குகளும், சிறந்த நடத்தைப் பண்புகளும் பழக்க வழக்கங்களும் ஒரு சேர ஊட்டப் பெற்றால் அதன்படி வளர்கின்ற ஒரு பிள்ளை, இந்த நாட்டின் ஒழுக்கச் சீலராகவும் மனிதாபிமானம் நிறைந்த ஒரு பிரஜையாகவும் திகழும்' என்றார்

'அத்தகைய ஒரு சிறந்த ஆன்மிக விழுமியம் கொண்ட பிரஜையால்தான் இந்நாட்டை அமைதி குலையாமல் பாதுகாக்கவும் முடியும். இளம் பராயத்தை ஆன்மிக அறநெறிகாளல் அழகுபடுத்தினால் அடுத்தவருக்கு மட்டுமன்றி எம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் அதன் அமைதி சீர்குலையாமல் பாதுகாக்க முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

சமகாலத்தில் உருவெடுத்துள்ள சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், அநியாயங்கள், படுகொலைகள் மற்றும் சீர் கெட்ட நடத்தைகளைச் செப்பம் செய்ய வேண்டுமானால் சிறந்த ஆன்மீகக் கல்வியூட்டலே பொருத்தமான தீர்வாகும்' என்றார்.

திருகோணமலை ஸ்ரீமாபுர தஹம் பாடசாலை, திருமலைப் பட்டினம் நீதி மன்ற வீதி குணா இந்து அறநெறிக் கல்வி நிலையம், ஜமாலியா இஸ்லாமிய அஹதியா பாடசாலை, லிங்க நகர் 'யூதா ததேயு' மறைக் கல்வி நிலையம் ஆகியவற்றில் கற்கும் சுமார் 300 மாணவர்களுக்கு உதயம் மறுவாழ்வு அமைப்பினால் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அமைப்பின் பொதுச் செயலாளர் ஜே. ஷர்மிலா, தலைவர் ஐ. கிரிஷாந்தி, உப தலைவர் எஸ். ஷியாமளாதேவி, பொருளாளர் எஸ். ஷர்மிளா இணைப்பாளர் எஸ். செல்வேந்திரன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .