2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

மதுபானசாலைகளின் அனுமதியை இரத்துச்செய்ய தீர்மானம்

Niroshini   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள மூன்று மதுபானசாலைகளின் அனுமதியை இரத்துச்செய்வது என நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுஅமைப்புகள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.

கடந்தகால ஆட்சியின்போது சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் இந்த மதுபானசாலைகள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொது அமைப்புகள் இங்கு சுட்டிக்காட்டின.

மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தியின் மீளாய்வுக்கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தின்போது மண்முனைப்பற்றில் உள்ள மூன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆரையம்பதியின் பிரதான வீதியில் உள்ள காந்தன் மதுபானசாலைகளினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,

சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்படும் மதுபானசாலைகள் தொடர்பில் மதுவரித்திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் .அவர்களுக்கு அது தொடர்பில் சட்ட நடவடிக்கையெடுப்பதற்கான அதிகாரம் உள்ளது.

ஓர் ஆலயம் மதுபானசாலையை வழங்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் வழங்கியுள்ளதாக நான் அறிகின்றேன். கலை, கலாசாரத்தையும் பண்பாட்டினையும் வளர்க்கும் இடமாக ஆலயம் இருக்கின்றது. அந்த ஆலயங்களில் ஒன்று மதுபானசாலைக்கு ஆதரவாக கடிதம் வழங்குவது என்றால் நாங்கள் வெட்கப்படவேண்டிய நிலையில் உள்ளோம். மண்பற்றுள்ள மதுவரித்திணைக்களத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பிலான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்றார்.

 

இங்கு கருத்து தெரிவித்த மண்முனைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன்,

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அப்பால்பட்ட பகுதிக்கான மதுபானசாலைக்கான அனுமதியைக்கொண்டு கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மண்முனைப்பற்றில் மூன்று மதுபானசாலைகள் தொடர்பில் பொதுஅமைப்புகளினால் முறைப்பாடு எமது அபிவிருத்திக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி, கிரான்குளம்,புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று மதுபானசாலைக்கு எதிராக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மதுபானசாலைகள் மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆலங்கள் ஆதரவு வழங்குவது வேதனைக்குரிய விடயம். ஆலயங்கள் மதுவை ஒழிக்கும் பணியை முன்னெடுக்கவேண்டும் என்பதே அதற்குரிய கடமையாகும் .ஆனால், ஆலயம் மதுபானசாலைக்கு அங்கிகாரம் வழங்குவது வெட்கப்படவேண்டிய விடயமாகவே உள்ளது.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 57 மதுபானசாலைகள் உள்ளதாக சொல்லப்படுகின்றது. மதுபானசாலைகளை இயன்றளவு குறைப்பதன் மூலமே எதிர்காலத்தில் வறுமையினை குறைக்க முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .