2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

2012 இறுதிக்குள் முழு நாட்டுக்கும் மின்சார வசதி - அமைச்சர் சம்பிக்க ரணவக்க

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எல்.தேவ், றிபாயா நூர், ஜௌபர்கான்)

2012ஆம் ஆண்டு இறுதிக்குள் மட்டக்களப்பு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை வழங்குவதே தனது நோக்கம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மின்சார சபை ஊழியர்கள் அதிகாரிகளைச் சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர், "வருடம் ஒன்றுக்கு 40 பில்லியன் நட்டத்துடன் இயங்கிவரும் இலங்கை மின்சாரசபையினை இலாபமீட்டுகின்ற நிறுவனமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். அதற்கு மின்சாரசைபயில் பணிபுரியும் சகலருடைய ஒத்துழைப்பும் அவசியமாகும்.

இலங்கையின் பெர்ருளாதாரம் தங்கியிருக்கின்ற 7 நிறுவனங்களில் இலங்கை மின்சாரசபையும் ஒன்றாகும். 98ஆம் ஆண்டு வரை இலாபம் ஈட்டுகின்றன நிறுவனங்களில் ஒன்றாக இருந்த மின்சாரபை அதன் பின்னர்தான் அதிலிருந்து விழத் தொடங்கியது.  இலாபம் ஈட்ட இயலாமல் போனால் நாடு பாதகமான நிலையை நோக்கிச் செல்லவேண்டி ஏற்படும். எனவே இலாபமீட்டும் நிறுவனமாக இலங்கை மின்சார சபையை மாற்ற வேண்டும்.

கடந்தகாலத்தில் சுற்றாடல்துறை அமைச்சராக இருந்த வேளை அதிலுள்ள 9 நிறுவனங்களை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியிருக்கிறேன். அதற்கு அங்குள்ளவர்களின் ஒத்துழைப்பே காரணமாக இருந்தது. அதே போன்று நீங்கள் அனைவரும் கொடுக்கின்றன ஒத்துழைப்பின் மூலம் மின்சாரசபையினை இலாபமீட்டுவதாக மாற்ற முடியும்.

1970ஆம் ஆண்டுகளில் மின்சாரம் ஒரு அலகு 18 சதமாக இருந்தது. இப்போது 18 ரூபாவாக இருககிறது. ஆனாலும் 13ரூபாவுக்கு விற்கிறோம். அப்படியிருந்தும் நிலுவையாக உள்ள கொடுப்பனவுகளால் இந்த நட்டம் ஏற்படுகிறது. கற்பிட்டியில் காற்றாடி மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. அதே போன்று மன்னார், பூநகரி உள்ளிட்ட பிரதேசங்களிலும் காற்றாடி மூலம் மின்சாரம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

அத்துடன், இங்குள்ள இயற்கைச் சக்திகளைப்பயன்படுத்தி கரிய சக்தி மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ளலாம். எதிர்வரும் காலங்களில் சூரிய சக்தி மற்றும் கடல் அலைகளைப்பயன்படுத்தியும் மின்சாரத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். பல நாடுகளில் 24 மணிநேர மின்சார வினியோகம் இல்லை. ஆனால் நமது நாட்டில் மக்களின் நலன் கருதி முழு நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
 
வன்னியில் இறுதிக்கட்ட யும்தம் நடைபெற்ற நந்திக்கடல் பிரதேசம் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் இப்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று அனைத்துப் பிரதேசங்களுக்கும் மின்விநியோகம் வழங்கப்படும். தொலைபேசிகள் இப்போது சாதாரண கடைகளிலும் பெற்றுக்கொள்ள முடிகிறது. அந்த அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் நவீனமயப்பட்டதாக தொலைபேசித் துறை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் மின்சாரசபை எந்தவிதமான வளர்ச்சியையும் நீண்டகாலமாக எட்டவில்லை.

இப்போது மின்சாரசபையுடனும், அமைச்சுடனும், அது தொடர்பான நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு மின்சார விநியோகம் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்படுவதற்கான தொலைபேசி இலங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மின்வினியோகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை ஒருமுகப்படுத்திப் பார்க்க முடியும்.

இனி வரும் காலத்தில் மின்சாரசபையில் மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்ற பதவி உயரவுகள் நிறுத்தப்பட்டு திறமை அடிப்படையிலான பதவி உயர்வுத் திட்டம் உருவாக்கப்படும். அதன்படி சிறந்த முறையில் சேவையாற்றுபவர்களுக்கே நன்மைகள் கிடைக்கும்" என்றார். இங்கு உரையாற்றிய மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உரையாற்றுகையில், "அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் பதவியேற்ற பின்பு முதன் முறையாக மட்டக்களப்பு வந்திருக்கிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு அபிவிருத்த ப்செய்யப்படவில்லை என அரசாங்கத்தைச் சாடுகிறது. அது எந்தளவுக்கு பொய்யான கருத்து. குறுகியகாலத்துக்குள் இப்பொழுது வன்னி உட்பட வடக்கின் அனைத்து பிரதேசங்களிலும் மின்சாரம் மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டள்ளன.

எமது பிரதேசத்தில் பல கிராமங்கள் மின்சாரத் தேவையை எதிர்பார்த்திருக்கின்றன. நாம் ஒரு நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தக்குறையை அமைச்சர் விரைவாகத் தீர்த்து வைப்பார். மின்சாரசபையில் பெருமளவான இளைஞர்கள் நிரந்தரமற்றவர்களாக வேலைபார்க்கிறார்கள். அது தொடர்பிலும் அமைச்சருடன் பேசியிருக்கிறேன். அதனையும் நேரம் வரும் போது செய்து தருவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செய்வாரா? என்றார்.

மட்டக்களப்பு பிராந்திய பிரதம பொறியியலாளர், திருமதி ரி.வி.மேகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா அம்மான், சிறுவர், மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இலங்கை மின்சார சபையின் தலைவர் வித்தியா அமரபால, பணிப்பாளர் றொசான் குணவர்த்தன, மன்சாரசபையின் கிழக்குமாகாண  பிரதி முகாமையாளர் ரீ.தவனேஸ்வரன், மற்றும் மின்சக்தி எரிசக்தித்துறை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மின்சாரசபை அதிகாரிகள் , ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .