2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

வளமுள்ள காணிகள் இனவாத அடிப்படையில் அபகரிக்கப்படுவதாக மாகாணசபை உறுப்பினர் புகார்

Kogilavani   / 2011 மார்ச் 30 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

"மட்டக்களப்பு  மாவட்டத்தில்   கிரான், செங்கலடி,  வவுணதீவு,  பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லை புறங்களில் உள்ள  அரசகாணிகளை  பெரும்பான்மை  இனத்தவர்களுக்கு இனவாத அடிப்படையில் மத்திய அரசாங்கம்   வழங்கி வருகின்றது.  இதனால்  இப்பகுதியில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  இச்செயல்பாட்டை  உடன் கைவிட வேண்டும்"  என கிழக்குமாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"வன பரிபாலன திணைக்களத்தின்  கீழ் உள்ளகாணிகள் என மத்திய அரசு கூறிக்கொண்டு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில்  உள்ள வடமுனைக்கு மேல் உள்ள வீரான்டகல்குளம் பகுதி   காணிகளையும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில்  புல்லுமலை,  மங்களகம என்னும் பகுதியில் உள்ள காணிகளையும்   வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில காணிகளையும்  பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில்  கெவிளியாமடு, புளுக்குநாவ , கொம்பகஸ்தலாவ பகுதியில்  உள்ள காணிகளையும் உள்ளடக்கிய மொத்தமாக 12,000 ஏக்கரை ஒருவருக்கு ஒரு துண்டு  50 ஏக்கர் வீதம் 240 துண்டுகளாக  குத்தகைக்கு ஊர்காவல் படையினர் சிலருக்கு வழங்கி உள்ளதாகவும்  அங்கே   வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கெவிளியாமடு தொடக்கம் உன்னிச்சைகுளம் மேற்பகுதியால் சென்று வடமுனைக்கு அப்பால்வரையும் காடுகளை அழித்து முட்கம்பி வேலி அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இப்பிரதேசங்களில் காணி தொடர்பாக எந்த நடவடிக்கையில் இறங்குவதென்றாலும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். இப்படி இருக்கும் போது எவருக்கும் தெரியாமல் இரகசியமாக 1983 ஆண்டு திட்டத்தை ஆரம்பிப்பது எந்த விதத்திலும்  நியாயம் இல்லை.

தமிழ் பேசும் மக்கள் விவசாயம் செய்யவும், மந்தைவளர்க்கவும்,  குடியிருக்கவும் நிலமில்லாமல் திண்டாடுகின்றார்கள். இப் பகுதி  தமிழ் முதலீட்டாளர்கள் விவசாயப்பண்ணை,  கால்நடைப்பண்ணை போன்ற திட்டங்கள் அமைக்க பிரதேசசெயலாளர்களிடம் நிலம் கேட்கின்றனர். இவர்களுக்கு நிலம் வழங்காமல்  பெரும்பான்மையினருக்கு மட்டும் இக்காணிகள் இரகசியமான முறையில் வழங்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் .

இதற்கு துணைபோகும் விதத்தில் மத்திய அரசுடன் சேர்ந்து இயங்கும் கிழக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பினரும் இமத்திய அரசின் மட்டக்களப்பு  மாவட்ட ஆளும் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் ஒத்து இயங்குகின்றனரா? என சந்தேகிக்கவேண்டியுள்ளது.

இது தொடர்பாக இறுதியாக  நடந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில்   மேற்குறிப்பிட்ட காணிகள் நில அளவை செய்யப்பட்டு எல்லைகளுக்கு பெரிய  வேலி அமைக்கப்படுவதாகவும் இதனால் பாரிய இழப்புக்கள் எமக்கு ஏற்படுமெனவும் கூறப்பட்டபோது வேலிகள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென்று  முதலமைச்சரால் கூறப்பட்டது. இன்னும் இது நடந்தேறவில்லை. 

ஆனால் மீண்டும் தற்சமயம் கிரான் வடமுனை பகுதியிலும் காணி பிடிக்கும் செயல்பாடு ஆரம்பமாகி உள்ளது. கேட்டால் மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட காணி என கூறப்படுகின்றது.

எனவே, மேற்குறிப்பிட்ட காணி வழங்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்து சக்திகளும் முன்வர வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருபகுதி பிரிக்கப்படுவதோடு   தமிழர்கள்  சிறுபான்மையினராகவும் மாறுவர் இப்பழி எம் அனைவரையும் சாரும்."


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .