2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

குப்பை கொட்டுவதற்கு காணி ஒதுக்குமாறு காத்தான்குடி நகரசபை கோரிக்கை

Super User   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி நகர சபை பிரிவில் நாளாந்தம் ஒன்று சேர்க்கப்படும் குப்பை கூளங்களை கொட்டுவதற்கு அரச காணியொன்றை தந்துதவுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் காத்தான்குடி நகர சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றை காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம். அஷ்பர் ஒப்பமிட்டு தலைவர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் நேரடியாக கையளித்துள்ளனர்.
அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காத்தான்குடி நகர சபையின் அதிகார எல்லைப் பரப்பினுள் திண்மக்கழிவுகளை கொட்டக்கூடிய தனியார் காணியோ, அரச காணியோ இல்லாமையினால் கடந்த காலங்களில் மட்டக்களப்பு வாவியோரத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் சேரும் குப்பை கூளங்களை கொட்டி வந்தோம்,
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் வெள்ளத்தினாலும், குப்பைகளினாலும் பாதிக்கப்பட்டார்கள்.

இதற்கு முன்பு டெங்கு எனும் கொடிய நோய் காத்தான்குடி பிரதேசத்தில் மிக தீவிரமாக பரவி நூற்றுக்கணக்கான மக்களை தாக்கியது.

ந்நோயினால் ஆற்றங்கரை ஓரத்தில் குப்பை கொட்டும் இடத்திலுள்ள மக்கள் மிகவும் கூடுதலாக பாதிக்கப்பட்டதுடன் இந்த இடத்திலேயே வாந்திபேதியெனும் வயிற்றோட்ட நோயும் கூடுதலாக பரவியது.

வெள்ளப்பெருக்கின் பின்னர் அப்பகுதி மக்களினால் குப்பை கொட்டுவதை நிறுத்தும்படி ஆர்ப்பாட்டங்கள் மூலம் கோரியதன் காரணமாக, குப்பைகளை கொட்டுவதற்கு இடமின்றி திண்மக்கழிவுகளை அகற்றும் செயற்பாட்டை இடை நிறுத்தி வைத்தோம்.

இதனைத் தொடந்து மன்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றில் காணி உரிமையாளரின் அனுமதியுடன் கடந்த இரண்டு மாத காலமாக காத்தான்குடி நகர சபை பிரிவில் சேரும் குப்பைகளை கொட்டி வந்தோம்.

தற்போது குப்பை கொட்டுவதை நிறுத்தாவிட்டால் வழக்கு தொடரப்போவதாக ஆரையம்பதி மன்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தனது 2011.4.1 ஆம் திகதி கடித மூலம் தெரிவித்திருந்தார்.

இக்கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு; 2011.4.8. ஆம் திகதி வரையிலும்  குப்பைகளை கொட்டுவதற்கான கால அவகாசத்தை கேட்டிருந்தோம். இதனால் குறித்த இடத்தில் 2011.8.4. திகதிக்கு பின்னர் குப்பைகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்திலும் முதலமைச்சருடனும், திருகோணமலையில் இடம்பெற்ற டெங்கு தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநரிடமும் இப்பிரச்சினையை முன்வைத்தோம்.

இருப்பினும் இது தொடர்பில் இதுவரையில் எதுவித நிரந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் 2011.4.8 ஆம் திகதியின் பின்பு குப்பைகளை கொட்டுவதற்கான இடம் எதுவுமில்லை.

இதனால் இப்பகுதி வாழ் மக்கள் பல அசௌகரியங்களுக்கும் சுகாதார பிரச்சினைகள் மற்றும் டெங்கு வாந்தி பேதி போன்ற நோய் தொடர்பாகவும் சிரமத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருமான கேட்டுக்கொள்கின்றோம்.

ஆரையம்பதி (மன்முனை பிரதேச சபை), காத்தான்குடி நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய மூன்று உள்ளுராட்சி மன்றங்களிலும் சேரும் குப்பைகளை ஒன்றாக சேர்த்து ஒரே இடத்தில் சேகரித்து தரம் பிரித்தல் நிலையத்தினை உருவாக்குதன் மூலம் திண்மக்கழிவகற்றல் செயற் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும்.

அதுவரை காத்தான்குடி நகர சபையினால் ஒன்று சேர்க்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தங்களது அதிகாரத்திற்குற்பட்ட அரச காணியொன்றை தந்துதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X