2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அதிருப்தியடைந்த வைத்தியர்கள் பணியைப் புறக்கணித்தனர்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாண ஆளுநர் தரப்பில் தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள், இன்னும் அமுல்படுத்தப்படாமல், உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்தும், அதைக் கண்டித்தும், இன்று (26) காலை 8 மணி தொடக்கம், கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இதன் காரணமாக, சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்குச் சென்றிருந்த மக்கள், பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண தகவல் தொடர்பு அதிகாரியான வைத்தியர் எம்.ஏ. சுஹைல் அஹமட் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண ஆளுநருடன், தமது பிரதிநிதிகள், இம்மாதம் 10ஆம் திகதி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக, அரச வைத்தியர்களுக்கு, இவ்வாண்டு ஜனவரியிலிருந்து அதிகரிக்கப்பட்ட மேலதிகக் கொடுப்பனவுகளில், இதுவரை வழங்கப்படாதுள்ள எஞ்சியுள்ள கொடுப்பனவுகளை, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் வழங்குவதற்கும்; மே மாதத்துக்குரிய சம்பளப் பட்டியலில், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு சேர்த்துக் கொள்ளப்படும் என, கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் மாகாண சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கும், ஆளுநரால் பணிப்புரை விடுவிக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டார்.
எனினும், இப்பணிப்புரைப்படி, கிழக்கு மாகாண அரச வைத்தியர்களுக்கு, இதுவரை எதுவிதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தஅவர், மே மாதத்துக்கான கொடுப்பனவு, புதிய சுற்றறிக்கைப்படி வழங்கப்படுவது தொடர்பில், உறுதியற்ற நிலைமையிலேயே காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
“இது தொடர்பாக, எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டும், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும், இந்த விடயத்தில், சம்பந்தப்பட்டவர்கள், பொறுப்பற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். அத்தோடு, தகுதிவாய்ந்த வைத்திய நிர்வாகிகளின் பற்றாக்குறை காரணமாக, நோயாளர்களுக்கான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
"எனவே, ஆளுநர் தரப்பால், எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை, கிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் சங்கக் கிளைகள், தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும்” என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X